கிரிக்கெட்டர் இல்லையென்றால் ஹீரோ தான்.. அந்த நிமிடத்தை மறக்கவே முடியாது.. சிவம் துபே நெகிழ்ச்சி!
கிரிக்கெட் வீரராக வர முடியவில்லை என்றால் சினிமாவில் நடிகனாகி இருப்பேன் என்று சிஎஸ்கே வீரர் சிவம் துபே தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசன் முதல் சிஎஸ்கே ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக மாறினார் சிவம் துபே. 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 418 ரன்களை குவித்த சிவம் துபே, மிடில் ஆர்டரில் களமிறங்கி ஸ்பின்னர்களை வெளுப்பதில் கில்லாடியாக மாறியுள்ளார். பந்தின் வேகம் கொஞ்சம் குறைவாக வந்தாலும் நிச்சயம் சிக்சருக்கு பறக்கும் என்பதை கண்மூடி கொண்டு சொல்லலாம்.
அதேபோல் மிஸ் ஹிட் என்ற பேச்சிற்கே சிவம் துபேவின் ஆட்டத்தில் இடமில்லை. இதனால் இந்திய அணியிலும் சிவம் துபே இடம் பிடித்துள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் சிவம் துபே ஆடிய அதிரடி ஆட்டம் மற்றும் பவுலிங் ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கான மாற்று வீரரை இந்திய அணி கண்டறிந்ததாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சிவம் துபேவை தேர்வு செய்ய வேண்டும் என்று பலரும் அறிவுறுத்த தொடங்கினார்கள். இருப்பினும் ஐபிஎல் தொடரை பொறுத்தே சிவம் துபேவின் தேர்வு இருக்கும் என்பதால், ஐபிஎல் தொடருக்காக சிறப்பாக தயாராகி வருகிறார். ரஞ்சி போட்டியில் ஏற்பட்ட காயத்திற்காக என்சிஏவில் இருந்த அவர், சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சிவம் துபே பேசுகையில், மாணவர்கள் அனைவரும் கனவுகளையும், இலக்கையும் நோக்கி ஓட வேண்டும். கல்வியின் வாயிலாக கனவுகளை எட்டிப்பிடிக்க கடின உழைப்பும், கவனமும் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். எப்போதும் பெற்றோரை மதித்து நடக்க வேண்டும். வெற்றியோ தோல்வியோ ஒவ்வொரு அடியையும் இலக்கை நோக்கிய பயணமாக பார்க்க வேண்டும்.
எனது வாழ்க்கையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியதை மறக்க முடியாது. எனது கிரிக்கெட்டரான பின் இருக்கும் நினைவுகளை விடவும், கிரிக்கெட் வீரராக உச்சத்தை அடைய பயிற்சியில் ஈடுபட்ட நாட்களை மறக்க முடியாது. அதேபோல் கிரிக்கெட் வீரராக வர முடியவில்லை என்றால், சினிமாவில் ஹீரோவாகி இருப்பேன் என்று கூறியுள்ளார்.