அந்த விஷயம் நடந்தால் போதும்.. உடனடியாக ஓய்வை அறிவித்துவிடுவேன்.. அதிர்ச்சி கொடுத்த ரோகித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது. விராட் கோலி, முகமது ஷமி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இந்திய அணி இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது. பேஸ் பால் என்ற அணுகுமுறையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் பொளந்து கட்டியுள்ளது இந்தியா.
இதற்கு முதல் காரணமாக ரோகித் சர்மா அமைந்துள்ளார். இளம் வீரர்களை வழிநடத்திய விதமும், முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி பேட்ஸ்மேனாக முன் நின்று அசத்தினார் ரோகித் சர்மா. 9 இன்னிங்ஸ்களில் 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 400 ரன்களை விளாசி இருக்கிறார் ரோகித் சர்மா. இதனால் ரோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கிய பின், அடுத்தடுத்து இந்திய அணியிலும் ரோகித் சர்மாவுன் இடம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வந்தது. பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருந்தாலும், ரோகித் சர்மாவின் வயதே இந்த கேள்விக்கு பின் இருக்கும் காரணமாக அமைந்தது. ஏனென்றால் 37 வயதாகும் ரோகித் சர்மாவால் இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாட முடியும் என்று பேசப்படுகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், எப்போது எனது ஆட்டம் போதுமானதல்ல என்று தோன்றுகிறதோ, அன்றைய நாளில் உடனடியாக ஓய்வை அறிவித்துவிடுவேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் எனது ஆட்டத்தை மெருகேற்றி இருக்கிறேன். என் வாழ்வின் சிறந்த கிரிக்கெட்டை ஆடி வருவதாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ரோகித் சர்மா இன்னும் சில ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று ரசிகர்களால் புரிந்து கொள்ளப்படுகிறது. விரைவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கினாலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா தொடர்ச்சியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.