ரஷ்யாவுக்காக போரிட்டால்… வெளிநாட்டவர்களுக்கு ஜனாதிபதி புடின் அளிக்கும் வாக்குறுதி

உக்ரைனில் ரஷ்யாவுக்காகப் போரிடும் வெளிநாட்டினர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் ரஷ்யக் குடியுரிமை அளிக்கும் ஆணையை ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ளார்.

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுக்கும் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் இணைந்துகொண்டுள்ள வெளிநாட்டவர்கள், ரஷ்ய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் அந்த வெளிநாட்டவர் மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்திற்கும் இந்த ஆணை பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், குறைந்தபட்சம் ஓராண்டுக்கு ரஷ்யாவுக்காக போரிடுவதாக அவர்கள் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும் என்ற விதியும் முன்வைத்துள்ளனர்.

அத்துடன் இதே காலகட்டத்தில் வாக்னர் கூலிப்படையில் இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தாலும், விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைனில் தங்கள் சார்பாக போரிடும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை குறித்த தரவுகளை ரஷ்யா இதுவரை வெளியிடவில்லை. ஆனால் கியூபா நாட்டினர் சிலர் பொருளாதார நிலை கருதி ரஷ்ய ராணுவத்தில் இணைந்துள்ளதாகவும், வாக்னர் கூலிப்படையில் சில ஆப்பிரிக்க நாட்டவர்கள் இணைந்துள்ளதாகவும், அதில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் முன்னர் தகவல் வெளியானது.

ரஷ்யா நடவடிக்கை

அமெரிக்க உளவு அமைப்புகள் வெளியிட்ட தகவலில் உக்ரைன் போரில் ரஷ்யா 315,000 வீரர்களை இழந்துள்ளது அல்லது காயம் காரணமாக வெளியேற்றியுள்ளது. இது போர் தொடங்கியபோது ரஷ்யா களமிறக்கிய வீரர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் என்றே குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், செப்டம்பர் 2022ல் மேலும் 300,000 வீரர்களை உக்ரைனில் களமிறக்க ரஷ்யா நடவடிக்கை முன்னெடுத்தது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மிகப்பெரிய களமிறக்கல் இதுவென்றும் கூறப்பட்டது.

3 நாட்களில் முடிவுக்கு வரும் என கூறப்பட்ட ரஷ்ய – உக்ரைன் போர் தற்போது 22 மாதங்களாக நீடித்து வருகிறது. இரு நாடுகளும் தங்கள் இழப்புகள் குறித்து விரிவான தரவுகள் எதையும் வெளியிட்டதில்லை.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்கி தெரிவிக்கையில், மேலும் 500,000 வீரர்களை களமிறக்க தாங்கள் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *