”இப்படி செய்தால் இனி திருப்பதி வழிபாட்டுக்கு அனுமதி இல்லை..” கொந்தளித்த தேவஸ்தானம்
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம் திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி, தேவஸ்தான அறங்காவலர் குழுவில் பணியாற்றிய முன்னாள் உறுப்பினர்கள் வருடத்தில் சில முறை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் முன்னுரிமை அடிப்படையில் ஏழுமலையானை வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் முன்னாள் அறங்காவலர் குழுக்களின் ஒரு சில உறுப்பினர்கள் தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள், வேண்டியவர்கள் ஆகியோரை உடன் அழைத்து கொண்டு அடிக்கடி திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நல்ல பழக்கமல்லாத இந்த பழக்கத்தை அவர்கள் கைவிட வேண்டும். மீண்டும் அதே பழக்கத்தை தொடர்ந்தால் அவர்கள் ஏழுமலையானை வழிபட அனுமதி அளிக்க மாட்டோம் என்று அப்போது கூறினார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினராக இடம் பெற்றவர்கள் தங்களுக்கு வேண்டியவர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் ஆகியோருக்கு சில காரணங்கள் அடிப்படையில் இது போன்ற வசதிகளை செய்து கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.