இந்தியாவில் நடப்பதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது: ஜியோ பேபி
தி கிரேட் இந்தியன் கிட்சன்’ படத்தின் மூலம் பெரிய கவனத்தைப் பெற்றவர் இயக்குநர் ஜியோ பேபி. இவர் இயக்கத்தில் மம்மூட்டி, ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளிவந்த, ‘காதல் – தி கோர்’ படமும் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றது.
இந்நிலையில், ஜியோ பேபி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “இந்தியாவில் இன்று நடக்கும் நிலவரங்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. படைப்பாளர்கள் இப்போது மத மற்றும் அரசியல் காரணங்களால் சென்சார் பிரச்னையை எதிர்கொள்கிறோம். இது இயக்குநர்களுக்கான கவலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கலைஞர்களுக்குமானது. படைப்பு சுதந்திரத்துக்காக கலைஞர்கள் உறுதியாக இருக்க இருக்க வேண்டும்.
ஆனால், சிலர் அதிலிருந்து பின் வாங்கி விடுகிறார்கள். குறிப்பாக, சமீபத்தில் ஓடிடியில் வெளியான அன்னபூரணி படத்தின் நீக்கம். ( மத நம்பிக்கையைப் புண்படுத்துவதாக நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டது. படக்குழு இதனை எதிர்த்து குரல் எழுப்பவில்லை). இதன் விளைவு, தாங்கள் ஏதோ ஒரு குற்றத்தைச் செய்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். இது சினிமாவுக்கோ, கலைஞர்களுக்கோ, சமூகத்துக்கோ நல்லதல்ல.
காதல் தி கோர் படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் பலரும் மம்மூட்டியை விமர்சித்தார்கள். காரணம், பல ஆண் கதாபாத்திரத்தில் நடித்த மம்மூட்டி தன்பாலின ஈர்ப்பாளரான மாத்தியூவாக நடித்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்றும் நம் நாட்டில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். ‘காதலை’ மக்கள் ஏற்றுக்கொள்வதைப் பார்க்கும்போது ஒருநாள் அவர்கள் (தன்பாலின ஈர்ப்பாளர்கள்) சாதாரண வாழ்க்கையை வாழலாம்” எனக் கூறியுள்ளார்.
காதல் தி கோர் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஜியோவின் முந்தைய படமான ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ நெட்பிளிக்ஸில் இருக்கிறது.