திருச்சியில் நடைபெற்ற ஐஜேகே மாநாடு… திரளாக கூடிய மக்கள்..!

சென்னை மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல கல்வி நிறுவனங்கள், ஊடகங்களை நடத்தும் பாரிவேந்தர் தொடங்கிய கட்சி தான் ஐஜேகே. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி ஆனார்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து மீண்டும் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இதனை கருத்தில் கொண்டு தொகுதி மக்களை வரவழைத்து தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் என்ற பெயரில் மாநாடு நடத்தினார். இதில் குறிப்பாக பெரம்பலூர் தொகுதிக்குள் அடங்கிய சட்டமன்ற தொகுதிகளான குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், பெரம்பலூர் பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட்டதால் தமிழர்களின் கலையான பாரிகும்மி, உருமி மேளம் போன்றவற்றின் பெருமைகளை விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஒவ்வொரு நிகழ்வையும் கண்டு ரசித்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐஜேகே கட்சியும் அங்கம் வகிப்பதால் பா.ஜ.க கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, புதிய நீதி கட்சி சண்முகம், காமராசர் மக்கள் கட்சி தமிழருவி மணியன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனர் தேவநாதன் என பலரும் கலந்து கொண்டனர்.