சட்டவிரோத ஆயுத பரிமாற்றம் உலகிற்கே அச்சுறுத்தல்! ரஷ்யா & வடகொரியா மீது குற்றச்சாட்டு!
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரின் மூன்றாம் ஆண்டு தொடங்கிவிட்ட நிலையில், ரஷ்யா மற்றும் வட கொரியா இடையிலான பண்ட பரிமாற்றங்கள் தொடர்பாக தென் கொரியா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை முதல், மில்லியன் கணக்கான ஆயுதங்கள் கொண்ட சுமார் 6,700 கொள்கலன்களை வட கொரியா, ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது என்று தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெடிமருந்துகள்
வடகொரியாவில் இருந்து ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்ட ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களில், மில்லியன் கணக்கான ரவுண்டு பீரங்கி குண்டுகள் அடங்கியுள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஷின் வோன்சிக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உணவு அனுப்பும் ரஷ்யா
வெடிமருந்துகளைப் பெற்றுக் கொள்ளும் ரஷ்யா, அதற்கு பதிலாக வட கொரியாவுக்கு உணவு மற்றும் பிற தேவைகளை அனுப்பி வருவதாகவும் தென் கொரியா கூறுகிறது.
ஜூலை முதல், வட கொரியா 3 மில்லியன் 152 மிமீ பீரங்கி குண்டுகள் அல்லது 122 மிமீ ரவுண்டுகளுடன் 6,700 கொள்கலன்களை ரஷ்யாவிற்கு அனுப்பியிருக்கலாம் என்று தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் கூறியதாக தென் கொரிய செய்தி நிறுவனமான யோன்ஹாப் செய்தி வெளியிட்டுள்ளது.
வட கொரியாவின் உள்ள வெடிமருந்து தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கானவற்றில் மூலப் பொருட்கள் மற்றும் மின்சாரம் இல்லை என்றும், இதனால் அவற்றின் உற்பத்தித் திறன் சுமார் 30 சதவீத அளவில் குறைந்துவிட்டதாகவும், தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். இருந்தபோதிலும், கணிசமான அளவு வெடிமருந்துகளை அனுப்பும் அளவுக்கு முழு திறனில் வட கொரியா செயல்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
உணவும் வெடிபொருட்களும்
ரஷ்யாவிலிருந்து வட கொரியாவுக்கு செல்லும் கொள்கலன்களில், ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் பாகங்கள் அடங்கிய கொள்கலன்களிலேயயே, உணவும் அனுப்பப்படுவதாக பகீர் தகவல்களையும் தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
பண்ட பரிமாற்றம்
வட கொரியாவும் ரஷ்யாவும் தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மேற்கொண்டுள்ள இந்த பண்ட பரிமாற்றமானது, வட கொரியாவில் உணவுப் பொருட்களின் விலையை நிலைப்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
ரஷ்யாவிலிருந்து வட கொரியாவிற்கு அனுப்பப்பட்ட கொள்கலன்களின் அளவு, பியாங்யாங்கில் இருந்து மாஸ்கோவிற்கு அனுப்பப்பட்டதை விட 30 சதவீதம் பெரியதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கொரிய தீபகற்பத்தில் பதற்றம்
ரஷ்யா மற்றும் வட கொரியா இடையிலான வெடிமருந்து பரிமாற்றம் குறித்து அமெரிக்காவும் தென் கொரியாவும் ஆலோசனை மேற்கொண்டன. இது தொடர்பாக நேற்று (புதன்கிழமை பிப்ரவரி 28) வட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பண்ட பரிமாற்றங்கள் குறித்து தென் கொரியாவும் அமெரிக்காவும் விவாதித்துள்ளதாக தெரிகிறது.
சட்டவிரோத பரிமாற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை
ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான சட்டவிரோத ஆயுத பரிமாற்றங்கள், கொரிய தீபகற்பத்திற்கு மட்டுமல்ல, உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் கடுமையான அச்சுறுத்தலாக இருக்கின்றன. சர்வதேச சமூகத்துடன் ஒருங்கிணைத்து இந்த சட்டவிரோத பரிமாற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏவுகணைகளை பரிசோதித்தும், கொரிய தீபகற்பத்தில் அடாவடி செய்துவரும் வடகொரியாவின் பொறுப்பற்ற செயல்களை தென் கொரியாவும் அமெரிக்காவும் கடுமையாகக் கண்டிப்பதாக இரு தரப்பு கலந்தாலோசனைக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.