கரூரில் சட்ட விரோதமாக சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 நபர்கள் கைது
கரூர் மாவட்டம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து காவல் நிலைய சரகங்களிலும் சேவல் சண்டை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் சட்ட விரோத செயல்களை தடுக்க வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிராபகர் உத்தரவுப்படி கரூர் நகரம், கரூர் ஊரகம் மற்றும் குளித்தலை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர்கள் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து பணி ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியான சேந்தமங்கலம் மேல்பாகத்தை சேர்ந்த வால்நாயக்கனூர், வேலம்பாடி கிராமம் குறும்பபட்டி பொன்னாவரம், நாகம்பள்ளி கிராமம் செல்லாண்டியம்மன் கோவில், மணல்மேடு மற்றும் கொத்தம்பாளையம் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 நபர்கள் கைது செய்து 6 வழக்குகள் பதிவு செய்து, அவர்களிடமிருந்து சண்டைக்கு பயன்படுத்திய சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிலர் மாவட்ட நிர்வாகம் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவ்வாறு தவறான தகவல் பரப்புபவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிராபகர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.