‘பயமா இருக்கு… ப்ளீஸ் இங்க வாங்க…’ இஸ்ரேல் தாக்குதலில் சிக்கி பலியான பாலஸ்தீன குழந்தை

“எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது, தயவுசெய்து வாருங்கள்” காசா நகரில் தனது குடும்பத்தினரின் கார் தீப்பிடித்ததை அடுத்து, ஆறு வயதுடைய ஹிந்த் ரஜப், மீட்புக் குழுவினரிடம் கூறிய வார்த்தைகள் இவை. வாகனத்தில் சிக்கி இறந்த உறவினர்களால் சூழப்பட்ட நிலையில், மூன்று மணிநேரம் தன்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சியிருக்கிறாள் இந்த 5 வயது பெண் குழந்தை.

ஜனவரி 29 அன்று ஹிந்த் ரஜப் உதவி கோரியதை அடுத்து அவரை மீட்க ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று அனுப்பப்பட்டது. ஆனால், விரைவில் ஆம்புலென்ஸ் வாகனத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஹிந்த் ரஜப்பைக் காப்பற்றுவதற்காகச் சென்ற மீட்புக் குழுவினரையும் காணவில்லை.

இந்நிலையில் 12 நாட்கள் கழித்து காசா நகரின் டெல் அல்-ஹவா பகுதியில் சனிக்கிழமை காலை காருக்குள் ஹிந்த் ரஜப் இறந்து கிடந்ததாக ஹிந்தின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

“ஹிந்தும் காரில் இருந்த அனைவரும் மரணம் அடைந்துள்ளனர்” என்று அவரது தாத்தா பஹா ஹமாடா தெரிவித்திருக்கிறார். “இன்று விடியற்காலையில் இஸ்ரேலியப் படைகள் வெளியேறியதால் குடும்ப உறுப்பினர்கள் அந்தப் பகுதியை அடைய முடிந்தது” என்றும் அவர் கூறியுள்ளார்.

“எனது மகள் உதவிக்காக அழுததைக் கேட்டு அவளைக் காப்பாற்றாதவர்களை நான் கடவுளுக்கு முன் நிறுத்தி கேள்வி கேட்பேன்” என ஹிந்தின் தாய் விஸ்ஸாம் ஹமாடா வேதனையுடன் கூறியிருக்கிறார்.

பாலஸ்தீனிய செஞ்சிலுவை சங்கத்தின் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரப்பட்ட காட்சிகளில் தாக்கப்பட்ட ஆம்புலன்ஸின் சிதைந்த பாகங்களைக் காணமுடிகிறது.

குண்டுவீச்சில் பாதிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு சில மீட்டர் தொலைவில் குழந்தை ஹிந்த் ரஜப்பை கண்டுபிடித்ததாகவும், குழந்தையை மீட்பதற்காகச் சென்ற இரண்டு மருத்துவர்களான யூசுப் அல்-சீனோ மற்றும் அஹ்மத் அல்-மதூன் ஆகியோரும் கொல்லப்பட்டதாகவும் பாலஸ்தீனிய செஞ்சிலுவை சங்கம் (PRCS) கூறியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *