காசாவில் உடனடி போர்நிறுத்தம்: இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா திட்டம்
காசாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்து, இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
6 வார கால போர்நிறுத்தத்தை மையப்படுத்தி கட்டாரில், நேற்றையதினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சம்
பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக இஸ்ரேலிய உளவுத்துறை தலைவர் கட்டாருக்கு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதனடிப்படையில் போர் நிறுத்த காலத்தில் ஹமாஸ் பிடியில் இருந்து இஸ்ரேல் பிணைக் கைதிகள் 40 பேரை விடுவிக்கவும், அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை விடுதலை செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்பது பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளதால் காசாவின் நிலைமை மோசமாகி வருவதாக சர்வதேச அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.
அப்பாவி மக்கள் கடும் துயரங்களை அனுபவித்து வருவதக்கவும், உதவிப்பொருட்கள் சரிவர சென்று சேராததால் மக்கள் பசி பட்டினியால் வாடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வரை தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் கூறி வருகின்றது.
இதற்கமைய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் இன்று இஸ்ரேலை சென்றடைந்துள்ளது.
இதன்போது, காசாவின் தெற்குப் பகுதியான ராபா நோக்கி தனது போர் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் இஸ்ரேலின் முடிவில் கருத்து வேறுபாடு கொண்டுள்ள அமெரிக்கா அதற்கான மாற்று வழிகளை முன்வைக்கவுள்ளது.
போர் தொடங்கியது முதல் ஆறாவது முறையாக இஸ்ரேல் பயணம் மேற்கொண்டுள்ள ஆன்டனி பிளிங்கன், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்து உரையாடியுள்ளார்.
முன்னதாக மத்திய கிழக்கு நாடுகளின் வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் உரையாடிய பிளிங்கன்,
“ராபாவில் இஸ்ரேல் மிகப்பெரும் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது தவறானது, நாங்கள் அதற்கு ஆதரவு அளிக்க போவதில்லை. ஹமாஸுடன் போர் புரிய இந்த நடவடிக்கை அவசியமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.