நாவூற வைக்கும் இறால் மசாலா கிரேவி… ஒருமுறை இப்படி மசாலாவை அரைத்து செய்து பாருங்கள்..!
அசைவ உணவுகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் மீன், நண்டு, இறால் போன்ற கடல் உணவுகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக ‘இறால்’… இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் கடல் உணவுகளில் ஒன்று.
இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இந்த இறாலை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபியானது சுவையான ‘இறால் கிரேவி’ ஆகும். இந்த இறால் கிரேவியை சாதம் மட்டுமின்றி நாண், சப்பாத்தி, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
சுவை மிகுந்த இந்த இறால் கிரேவியை மசாலா அரைத்து சேர்த்து வீட்டிலேயே எளிய செய்முறையில் எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
இறால் – 500 கிராம்
வெங்காயம் – 2
புளி கரைசல் – 4 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துண்டுகள் – 50 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் – 8
பச்சை மிளகாய் – 3
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1.5 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 4 கொத்து
உப்பு – 1 டீஸ்பூன்
உலர்ந்த வறுத்த மசாலா – முன்பு குறிப்பிட்டது
செய்முறை :
முதலில் இறால்களை நன்றாக சுத்தம் செய்து அலசி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துள்ள காஷ்மீரி மிளகாயை போட்டு வெந்நீர் ஊற்றி 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
பின்பு சிறிதளவு புளியை எடுத்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கரைத்து அதன் கரைசலை எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும் சீரகம், கடுகு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடங்களுக்கு குறைந்த வெப்பத்தில் வறுத்து எடுத்து ஆறவைக்கவும்.
அனைத்தும் ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஊறவைத்த காஷ்மீரி மிளகாய், தேங்காய் துண்டுகள் ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்பு கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
அடுத்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் 12 நிமிடங்கள் வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை 2 நிமிடங்களுக்கு குறைந்த வெப்பத்தில் வதக்கவும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட், 1/2 கப் தண்ணீர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.
மசாலா பேஸ்ட் நன்றாக வதங்கி எண்ணெய் பிரியும் வரை ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் சமைக்கவும்.
அடுத்து அதனுடன் மஞ்சள் தூள், சிகப்பு மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் புளி கரைசல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து மிதமான தீயில் சமைக்கவும்.
எண்ணெய் பிரியும் தருவாயில் இறால்களை சேர்த்து அதனுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து மிதமான தீயில் மூன்று நிமிடங்களுக்கு சமைக்கவும்.
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து 10 நிமிடங்களுக்கு மூடி போட்டு சமைத்து இறக்கினால் சுவையான ‘இறால் கிரேவி’ ரெடி.