சுவிஸ் மாகாணமொன்றில் பயங்கரமாக தீப்பற்றி எரிந்த வீடு: மூன்று குழந்தைகள் பலி
சுவிஸ் மாகாணமொன்றில், வீடு ஒன்றில் தீப்பற்றியதில், அந்த வீட்டிலிருந்த மூன்று குழந்தைகள் பலியானார்கள், அவர்களுடைய பெற்றோருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சுவிஸ் மாகாணமொன்றில் தீப்பற்றி எரிந்த வீடு
சுவிட்சர்லாந்திலுள்ள Lucerne மாகாணத்திலுள்ள Escholzmatt-Marbach என்னும் கிராமத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில், நேற்று அதிகாலை 1.00 மணியளவில் தீப்பற்றியுள்ளது.
1.20 மணியளவில் பொலிசாருக்கு தகவல் கிடைக்க, அவர்கள் தீயணைப்புக்குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்கள்.
ஆனால், அவர்கள் செல்லும்போது வீடு பயங்கரமாக எர்ந்துகொண்டிருந்திருக்கிறது. அந்த வீடு பற்றி எரிந்த காட்சியை 14 கிலோமீற்றருக்கு அப்புறமிருந்து பார்க்க முடிந்ததாக, சம்பவத்தைக் கண்ணால் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
தீயணைப்புத்துறையினருக்கு ஏற்பட்ட தர்ம சங்கடம்
வீடு தீப்பற்றி எரிந்துகொண்டிருக்க, அந்த வீட்டிலிருந்த பெரியவர்கள் தப்பி வந்துவிட்டார்கள். அவர்களில் 36 மற்றும் 43 வயதுடைய ஆண்கள் இருவருக்கு பயங்கரமான அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டார்கள். அந்த வீட்டிலிருந்த 38 வயது பெண்ணுக்கு லேசான காயங்களே ஏற்பட்டுள்ளதால், அவருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீட்டுக்குள் 6,7 மற்றும் 9 வயதுடைய மூன்று பிள்ளைகள் சிக்கிக்கொண்டுள்ளார்கள். அந்த வீடு மரவீடு என்பதால், அவர்களைக் காப்பாற்ற தீயணைப்புத்துறையினர் வீட்டுக்குள் சென்றால், அவர்களும் தீயில் சிக்கிக்கொள்ள நேரிடும் என்பதால், தீயணைப்புத்துறையினருக்கு தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.