இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.8.3 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவோர் எண்ணிக்கை 10 கோடியாக உயரும்: கோல்டுமேன் சாக்ஸ் மதிப்பீடு
புதுடெல்லி: ஆண்டுக்கு ரூ.8.3 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை 2027-ம் ஆண்டுக்குள் 10 கோடியாக உயரும் என்று சர்வதேச முதலீட்டு நிறுவனம் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இந்தியர்களின் வருமானம், நுகர்வுத் திறன், சொத்து உள்ளிட்டவை தொடர்பாக கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. 2027-ம் ஆண்டுக்குள் 3-வது இடத்துக்கு முன்னகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய மக்களின் வருவாய் அடுத்த 3 ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கும் என்றுஅந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
பல துறை வளர்ச்சி: ஆண்டுக்கு ரூ.8.3 லட்சம் வருவாய் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை 2015-ம் ஆண்டு 2.4 கோடியாக இருந்தது. தற்போது அது 6 கோடியாக உயர்ந்துள்ளது. 2027-ம் ஆண்டில் அது 10 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உணவு, ஆடை, ஆபரணங்கள் உள்ளிட்ட துறைகள் பெரும் வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் தங்கம், ரியல் எஸ்டேட் தவிர்த்து பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வது கடந்த 5 ஆண்டுகளில் பெரும் அளவில் அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் 12 கோடிக்கு மேற்பட்ட டீமேட் கணக்குகள் உள்ளன.
அதேசமயம், மேல்வர்க்கத்தின ருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக் கும் இடையில் செலவு செய்யும் திறனில் இன்னமும் பெரும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது என்று அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.