ராமரின் பெயரால் நாட்டில் பதற்றத்தையும், வெறுப்பு அரசியலையும் அரங்கேறியுள்ளது – திருமாவளவன்!
ஜனவரி 26ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்பாட்டில் திருச்சியில் நடைபெற உள்ள மாநாடு மற்றும் அதற்கு பாதுகாப்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ஜனவரி 26ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரி காவல்துறை தலைமை இயக்குனரை சந்தித்து முறையிட்டு இருக்கிறோம். இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவரும், இந்தியா கூட்டணியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவும், தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். இடதுசாரி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.” என்றார்.
மேலும், “இந்தியக் கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்க விழாவாக இந்த விழா அமையும். இந்தியா கூட்டணிக்கான தேர்தல் வெற்றிக்கான விழாவாக இந்த மாநாடு அமையும். இந்த மாநாடு தேர்தல் நேரத்தில் ஒருங்கிணைக்கப்படுகிற சூழலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக ஒருங்கிணைக்கப்படுகிறது. அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறோம். அடிப்படை பிரச்சினைகள் எல்லாம் விட்டு அதிலிருந்து மக்களை முழுமையாக மடைமாற்றம் செய்யும் வகையில் பிரதமர் மோடியும், அவரது சகாக்களும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அயோத்தியில் குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டு பிரான பிரதிஷ்டை என்கிற உயிரூட்டும் நிகழ்வு நடந்தேறி இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளம் போடப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பிரதமர் பேசியிருக்கிறார். ராமரின் பெயரால் நாட்டில் பதற்றத்தையும், இந்துக்களையும் இந்துக்கள் அல்லாதவர்களையும் பிளவுபடுத்துகிற வெறுப்பு அரசியலையும் அரங்கேற்றுகிற ஒரு நிகழ்வாக தான் இந்த நிகழ்வு இன்று அமைந்திருக்கிறது. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி இருக்கிறது. ஜனநாயகத்திற்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகிறது. அவர்கள் செய்து வருகிற அரசியல் ’ஜெய் ஸ்ரீ ராம்’ என்பது மட்டும் தான். அப்பாவி உழைக்கும் இந்து மக்கள் அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்” என கூறினார்.