தூத்துக்குடி, நெல்லையில் 35 பேர் மழை வெள்ளத்தால் பலி.. கணக்கெடுப்பு தொடர்கிறது.. தலைமை செயலர் தகவல்!

தென் மாவட்டங்களில் கனமழை வெள்ளம் காரணமாக 35 பேர் வரை இறந்துள்ளனர் எனத் தகவல்கள் வந்துள்ளன. இன்னும் கணக்கெடுப்பு முடியவில்லை என தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்ட பகுதிகளில் கடந்த 17, 18ஆம் தேதிகளில் பெய்த அதிகனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஏராளமான இடங்களை மழை வெள்ளம் சூழ்ந்தது. தற்போது வெள்ளம் வேகமாக வடிந்து வருகிறது. இந்நிலையில், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும், நிவாரணப் பணிகளையும் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றும், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சீவலப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து கணக்கிட்ட தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, “தென் மாவட்டங்களில் கனமழை பாதிப்பின் காரணமாக மொத்தமாக 780 குளங்களில் உடைப்புள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனழையால் 328 குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதைச் சரிசெய்ய, நமது அரசுப் பணியாளர்கள் அவற்றைச் சீரமைக்க வேலை செய்துகொண்டு வருகிறார்கள். விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும்.

மணிமுத்தாறு அணை நிரம்பியுள்ளது. எனவே, உடனடியாக இந்த குளங்களை சரிசெய்து, அதில் நீர் நிரப்ப ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இதனை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறோம். போக்குவரத்து சரிசெய்யப்படாத இடங்களில் மாற்று ஏற்பாடு செய்யப்படும். மேலும் போக்குவரத்தினை சரிசெய்வதற்கு உண்டான சாலைப் பணிகளையும் செய்வோம்.

கனமழை வெள்ளம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 22 பேர், திருநெல்வேலியில் இதுவரை 13 பேர் என 35 பேர் வரை இறந்துள்ளனர் எனத் தகவல்கள் வந்துள்ளன. இன்னும் கணக்கெடுப்பு முடியவில்லை.

முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 21ஆம் தேதி நெல்லை வந்தபோது பயிர்ச்சேதம், கால்நடை இறப்பு, வீட்டின் சேதம் ஆகியவற்றுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். எனவே, அதற்கான கணக்கெடுப்பு விவரங்கள், எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனுடன் சேர்ந்து இதற்குண்டான தகவலையும் பெற்று, அதன்பின் அதற்கு உரிய நிவாரணம் தரப்படும்.

வணிகர்கள் பாதித்து இருந்தால், அவர்களுடனும் அரசுடனும் கலந்து பேசி உதவி செய்யப்படும். அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு, காப்பீடு மூலமோ அல்லது பிற மூலங்களின் மூலமோ உதவிபெற்று, எவ்வளவு அதிகபட்சமாக உதவி செய்யமுடியுமோ அந்த உதவி மக்களுக்கு வழங்கப்படும்.

கேரள மாநிலத்தில் இருந்து உதவி செய்ய முன்வந்துள்ளார்கள். ஏற்கனவே கேரள தலைமைச் செயலாளர் நேரடியாக நம்முடன் வெள்ள பாதிப்பு குறித்து பேசினார். கேரள மாநிலத்தில் இருந்து வந்த 11 தொழில் நுட்ப அறிவு பெற்றவர்கள், தமிழ்நாட்டின் நீர் சார்ந்த பிரச்சனைகளுக்கு, நமது பொறியாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

வானிலை பற்றி நிறைய பேசியுள்ளோம். இப்போதைக்கு மக்களின் தேவைகளை அறிந்து செயலாற்றி வருகிறோம். உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறைகளில் ஏராளமான பாதிப்புகள் உள்ளன. அதைச் சரிசெய்யும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம். உடனடியாக மக்களை மீட்டு அவர்களுக்கான அடிப்படை சேவைகள் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *