இன்று கருணாநிதியின் நினைவிடம் திறப்பு : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்..!

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது., தமிழ்நாட்டு வரலாற்றில் 19 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்த கருணாநிதி தனது 95வது வயதில் 2018 ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி மறைந்த நிலையில், நீதிமன்றத்தின் ஆணை பெற்று பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகிலேயே இவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன.
சென்னைக் கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் ‘பேரறிஞர் அண்ணா நினைவிடம்’, ‘முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம்’ எனும் பெயர்கள் அழகுறப் பொறிக்கப்பட்டுள்ளன.நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் எதிரில் அமர்ந்து படிப்பது போன்ற தோற்றத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலை மற்றும் வலபுறம் இளங்கோவடிகள், இடப்புறம் கம்பர் சிலைகள் அமைந்து நம்மை மகிழ்விக்கின்றன. நினைவிடங்களின் முன்பகுதி இருபுறங்களிலும் பழமையான புல் வெளிகள் அமைந்துள்ளன. இடப்புறத்தில் அண்ணா அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
அண்ணா சதுக்கம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி அமைந்த மண்டபங்கள் வெண்மை நிறத்தில் பளிச்சிடுகின்றன. “எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது.” எனப் பொறிக்கப்பட்டுள்ள அண்ணாவின் சதுக்கத்தைக் கடந்து சென்றால், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அமர்ந்து எழுதும் வடிவிலான சிலையை காணலாம். சதுக்கத்தில், “ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்” எனும் தொடர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எண்ணப்படியே பொறிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புதிய நினைவிடத்தையும் இன்று (பிப். 26-ம் தேதி) மாலை 7 மணி அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.