ராமர் கோயில் திறப்பு விழா.. ஜனவரி 22 அன்று வங்கிகளுக்கு விடுமுறையா? மத்திய நிதியமைச்சகம் சொன்ன பதில்..
அயோத்தியில் ராமர் கோயில் மகா கும்பாபிஷேக விழாவிற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பல மாநிலங்கள் ஏற்கனவே ஜனவரி 22 அன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளன.. உத்தரபிரதேச மாநில அரசு, ஜனவரி 22 அன்று இறைச்சி விற்பனைக்கு கூட தடை விதித்துள்ளது. அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. .
அதன்படி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஊழியர்கள் பங்கேற்கும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்கள் ஜனவரி 22ம் தேதி 2.30 மணி வரை அரை நாள் மூடப்படும் என பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த சூழலில் ஜனவரி 22ஆம் தேதி திங்கட்கிழமை வங்கிகள் திறக்கப்படுமா அல்லது மூடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சஸ்பென்ஸுக்கு முற்றுப்புள்ளி வைத்து நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு டு அனைத்து பொதுத்துறை வங்கிகள்/பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள்/பொதுத்துறை நிதி நிறுவனங்கள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் ஜனவரி 22ஆம் தேதி மதியம் 2:30 மணி வரை மூடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 22 திங்கட்கிழமை அன்று வங்கிகளுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், பொதுத்துறை நிதி நிறுவனங்கள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, எல்ஐசி அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்கப்படும்.
ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு அன்றைய தினம் கோயில் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், யோகி ஆதித்யநாத் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் இந்த பிரம்மாண்ட நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். அரசியல்வாதிகள், பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பலர் உட்பட கோயில் அறக்கட்டளை, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் அழைப்பாளர் பட்டியலில் 7,000 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.