ராமர் கோயில் திறப்பு: தினமும் தரையில் தூங்கி இளநீர் மட்டுமே குடிக்கும் பிரதமர் மோடி!
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் வருகிற 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார். ராமர் கோயில் திறப்பு விழாவின்போது, குழந்தை ராமர் சிலையை தற்காலிக இடத்தில் இருந்து புதிய கோயிலுக்கு பிரதமர் மோடி சுமந்து செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் விரதத்தை கடந்த 12ஆம் தேதி தொடங்கினார். இந்த நிலையில், பிரதமர் மோடி யாம் விதிகளை கண்டிப்பாக பின்பற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர், தினமும் போர்வையை விரித்து தரையில் தூங்குவதாகவும், இளநீர் மட்டுமே குடித்து வருவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
11 நாட்கள் விரத காலத்தில் வெங்காயம், பூண்டு மற்றும் பல பொருட்களைத் தடுக்கும் சாத்விக் உணவு முறையை பின்பற்ற வேண்டும். மனதையும் உடலையும் தூய்மைப்படுத்த தவம், தியானம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இந்த விதிகள் அனைத்தையும் பிரதமர் மோடி கண்டிப்பாக பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான சடங்குகள் ஜனவரி 12 முதல் தொடங்கியது. ஜனவரி 22 ஆம் தேதி, கும்பாபிஷேகத்தின்போது, பிரதமர் மோடி ‘பிரான் பிரதிஷ்டை’ பூஜையை நடத்துவார் என்று இதுகுறித்த விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. லக்ஷ்மிகாந்த் தீட்சித் தலைமையிலான அர்ச்சகர்கள் குழு பிரான் பிரதிஷ்டையின் முக்கிய சடங்குகளை செய்யவுள்ளனர்.
ஜனவரி 22 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு பிரான் பிரதிஷ்டை பூஜைக்கான நல்ல நேரம் என்று கோயில் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர். மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜால் கருங்கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து வயதுடைய ராமர் சிலை நேற்றிரவு கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. சிறப்பு பூஜையை தொடர்ந்து கருவறையில் இச்சிலை வைக்கப்படவுள்ளது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த வாரம், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள கலராம் கோயிலின் வளாகத்தில் தூய்மை இயக்கத்தின் ஒருபகுதியாக அவர் சுத்தம் செய்தார்.