சுயதொழில் செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை, ரூ.2 லட்சம் வரை கடன்… விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி?
உடல் உழைப்பையும், பாரம்பரிய கருவிகளையும் பயன்படுத்தி வேலை செய்யும் கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினை தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் செப்டம்பர் 17, 2023 அன்று பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாட்டிலுள்ள கைவினைக் கலைஞர்களின் நிலையை உயர்த்துவது தான் இந்த மத்திய அரசு திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். அவர்களது வேலையின் தரத்தை ஊக்குவிப்பதற்காக இந்த திட்டத்திற்கென 13,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினை தொழிலாளர்களுக்கு அடமானம் இல்லாத கடன் வழங்குதல், திறனுக்கான பயிற்சி, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்க தொகைகள், சந்தை தொடர்பான ஆதரவு மற்றும் நவீன கருவிகள் போன்றவற்றை இந்த திட்டம் வழங்குகிறது.
தகுதி என்ன?
கைவினைத் தொழில் அல்லது கலை வேலைப்பாடுகளை குடும்பத் தொழிலாக செய்து வருபவர்கள் மற்றும் சுய தொழிலாக ஏற்று நடத்தி வரக்கூடிய 18 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் விஸ்வகர்மா திட்டம் மூலமாக பயன்பெறலாம்.
பொற்கொல்லர், கல் தச்சர்கள், காலணி செய்பவர், காலணி தைப்பவர், குயவர், தச்சர், சிற்பிகள், முடி திருத்தும் தொழிலாளர், கொத்தனார், கயிறு செய்பவர், டெய்லர், சலவைத் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர் உட்பட 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
அங்கீகாரம்: கைவினை தொழிலாளர்களுக்கு பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் ஐடி கார்டு போன்றவை வழங்கப்படுவதோடு குறிப்பிட்ட தொழிலில் அவர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படும்.
கருவிகளுக்கான ஊக்கத்தொகை: திறன்களை மதிப்பீடு செய்த பிறகு 15000 ரூபாய் மதிப்பிலான குறிப்பிட்ட அந்த தொழில் சம்பந்தப்பட்ட நவீன கருவிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அடிப்படை பயிற்சி: இந்த திட்டத்தின் கீழ் தகுதி பெறுபவர்களுக்கு 5 முதல் 7 நாட்கள் அடிப்படை திறன் பயிற்சி வழங்கப்பட்டு, ஒரு நாளைக்கு 500 ரூபாய் ஸ்டைபெண்ட் தொகை வழங்கப்படும்.
மேம்படுத்தப்பட்ட பயிற்சி: அடிப்படை பயிற்சிக்கு பிறகு 15 நாட்கள் மேம்படுத்தப்பட்ட பயிற்சி கொடுக்கப்படும். இந்த பயிற்சிக்கும் ஒரு நாளைக்கு 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அடிப்படை திறன் பயிற்சியை முடித்த கைவினை கலைஞர்களுக்கு 18 மாதம் திருப்பி செலுத்த வேண்டிய கால அளவு கொண்ட அடைமானம் இல்லாத 1 லட்சம் ரூபாய் வரையிலான கடன் வழங்கப்படும். இதுவே மேம்படுத்தப்பட்ட பயிற்சியை முடித்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரையிலான கடன் கொடுக்கப்படும். எனினும் முதலில் ஒரு லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்திய பிறகு 2 லட்சம் ரூபாய் கடனை பெற முடியும்.
ஒரு மாதத்திற்கு 100 டிஜிட்டல் ட்ரான்சாக்ஷன்கள் என்ற வீதம் ஒவ்வொரு டிரான்ஸாக்ஷனுக்கும் 1 ரூபாய் ஊக்கத்தொகையை தொழிலாளர்கள் பெறலாம்.
சந்தை ஆதரவு: கைவினைப் பொருட்கள் எளிதாக சந்தையை அடைவதற்கும், அதனை பொதுமக்களிடையே பிரபலமாக்கி விளம்பரப்படுத்துவதற்குமான ஆதரவு வழங்கப்படும்.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்திற்கு பதிவு செய்வது எப்படி?
படி 1: பிரதமரின் விஸ்வகர்மா
https://pmvishwakarma.gov.in/Home/HowToRegister போர்ட்டலுக்கு செல்லுங்கள்.
படி 2: உங்களுடைய மொபைல் மற்றும் ஆதார் வெரிஃபிகேஷனை நிறைவு செய்ய வேண்டும்.
படி 3: பதிவு படிவத்திற்கு விண்ணப்பிக்கவும்.
படி 4: பிரதமரின் விஸ்வகர்மா டிஜிட்டல் ஐடி மற்றும் சான்றிதழை டவுன்லோட் செய்யவும்.
படி 5: பிரதமரின் விஸ்வகர்மா போர்ட்டலில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் ஆதன்டிகேஷனை பொது சேவை மையங்களில் செய்து முடிக்கலாம்.
இது சம்மந்தமாக ஏதேனும் கேள்விகள் இருக்கும் பட்சத்தில் கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினை தொழிலாளர்கள் 18002677777 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது pm-vishwakarma@dcmsme.gov.in. என்ற மின்னஞ்சலில் இமெயில் அனுப்பலாம்.