சேப்பாக்கத்தில் சம்பவம்.. தயாராகும் ஆர்சிபி.. நாள் குறித்த ஆண்டி பிளவர்.. விராட் கோலி ரிட்டர்ன்ஸ்?
ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் ஆர்சிபி அணியின் பயிற்சி முகாம் தொடங்கும் குறித்து தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் 2 அணிகள் முதல் போட்டியிலேயே மோதவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் 2008ஆம் ஆண்டுக்கு பின் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் சிஎஸ்கே அணியை ஒருமுறை கூட ஆர்சிபி அணி வீழ்த்தியதில்லை. இதனால் 15 ஆண்டு கால வரலாற்றை மாற்றுவதற்கு ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல் விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனி இருவரும் கடைசி முறையாக ஐபிஎல் தொடரில் மோதவுள்ளதால் இரு அணி ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.
அதேபோல் ஐபிஎல் அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், ஒவ்வொரு அணி நிர்வாகங்களும் பயிற்சி முகாம் குறித்து திட்டமிட தொடங்கியுள்ளனர். ஆர்சிபி அணியை பொறுத்தவரை பயிற்சியாளராக ஆண்டி பிளவர் புதிதாக பொறுப்பேற்றுள்ளார். இதனால் திட்டமிடல், பயிற்சி முறை, அணுகுமுறை, காம்பினேஷன் உள்ளிட்டவை மாற்றப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
இதனால் ஆர்சிபி அணியின் பயிற்சி முகாம் மார்ச் 10ஆம் தேதி தொடங்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த பயிற்சி முகாமில் அனைத்து வீரர்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் லண்டனில் முகாமிட்டுள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மார்ச் முதல் வாரத்தில் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின் ஆர்சிபி அணியின் பயிற்சி முகாமில் சில நாட்கள் இருந்த பின், மீண்டும் குடும்பத்தினருடன் சில நாட்கள் இருப்பார் எனவும், பின்னர் மீண்டும் அணியுடன் இணைவார் என்று கூறப்படுகிறது. இதனால் விராட் கோலியின் ரிட்டர்ன்ஸ் எப்போது என்று ரசிகர்கள் பலரும் ஆவலாக உள்ளனர். அவருக்கு பிப்.15ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.