பிரியாணி கடையில் வருமான வரித்துறை ரெய்டு.. அட பெங்களூர் மேக்னா புட்ஸ்-ப்பா..!!

பெங்களூரின் பிரபல உணவகங்களில் ஒன்றான மேக்னா ஃபுட்ஸ் கடை பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கும் வாய்ப்பு அதிகம், காரணம் இந்த ஹோட்டலின் காரசாரமான பிரியாணி அனைவருக்கும் பிடித்த ஒன்று, ஒரு பிரியாணி வாங்கினால் 2 பேர் சாப்பிடும் அளவுக்கும் இருப்பதாலேயே இந்த பிரியாணிக்கு செம டிமாண்ட்.
இந்த நிலையில் மேக்னா ஃபுட்ஸ் ஹோட்டல்களில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 19 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நேரத்தில், கர்நாடகா மற்றும் கோவாவைச் சேர்ந்த வருமான வரித்துறை குழுவினர், பெங்களூரின் கோரமங்களா, ஜெயா நகர் மற்றும் இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மேக்னா ஃபுட்ஸ் கடைகளில் சோதனை நடத்தினர்.
வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை இதுவரையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த உணவக நிறுவனம் பத்மா ஆத்லூரி மற்றும் ராம்பாபு மண்டவா ஆகியோரால் நடத்தப்படுகிறது. இந்த ஹோட்டலில் ஆந்திர உணவு வகைகள் மிகவும் பிரபலமானவை, குறிப்பாக இவர்களின் பிரியாணி வகைகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற தளத்தில் தினசரி அடிப்படையில் அதிகப்படியான ஆர்டர்களை பெற்று வரும் மேக்னா புட்ஸ், பெங்களூரில் பல இடங்களில் கிளவுட் கிட்சன் அமைப்பிலும் இயங்கி வருகிறது. இன்று ராமேஸ்வரம் கபே, ஆர்என்ஆர் பிரியாணி என பல பிராண்டுகள் பெங்களூரில் பிரபலமானதாக இருந்தாலும் கட்டத்தட்ட 15 வருடங்களாக தொடர் வளர்ச்சி பாதையில் உள்ளது மேக்னா புட்ஸ்.
2006 ஆம் ஆண்டு பெங்களூரின் கோரமங்களாவில் முதன் முதலாக தொடங்கப்பட்ட இந்த உணவகம், தற்போது பெங்களூரில் ஐந்து கிளைகளை கொண்டுள்ளது. நீங்க இந்த ஹோட்டல் பிரியாணியை சாப்பிட்டு உள்ளீர்களா என்பதை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.