வர்த்தக பற்றாக்குறை உயர்வு.. ஏற்றுமதியில் புதிய சாதனை படைக்க வாய்ப்பு..!!
சனிக்கிழமை பொதுத்தேர்தல் நடக்கும் தேதிகளை அறிவிக்கப்படும் வேளையில் வெள்ளிக்கிழமை மத்திய அரசு வர்த்தக பற்றாக்குறை குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது.
ஒருபக்கம் தேர்தல் பத்திரம், பெட்ரோல் விலை குறைப்பு, கூட்டணி முடிவுகள் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவந்துகொண்டு இருக்கும் வேளையில் வர்த்தக பற்றாக்குறை அளவீடுகள் முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 18.71 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த மாதத்தை விடவும் அதிகமாக உள்ளது மட்டும் அல்லாமல், கடந்த மாதம் 9 மாதங்களில் இல்லாத அளவு குறைவான அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
2024 ஜனவரியில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 17.5 பில்லியன் டாலராக இருந்து, 2023 பிப்ரவரி மாதத்தில் அது 16.6 பில்லியன் டாலராக இருந்தது. வர்த்தகப் பற்றாக்குறை என்பது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் மத்தியிலான வித்தியாசம் தான்.
இதனால் வர்த்தகப் பற்றாக்குறை குறைவாகவோ அல்லது மைனஸ் அளவில் இருந்தால் மிகவும் சாதகமான வர்த்தக சூழ்நிலை இருப்பதாகப் பொருள். அதாவது இறக்குமதியைக் காட்டிலும் ஏற்றுமதி அதிகமாக இருந்தால் வர்த்தகப் பற்றாக்குறை மைனஸ் அளவில் இருக்கும்.
வர்த்தகப் பற்றாக்குறை குறைவது மூலம், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைவதோடு, ரூபாயின் மதிப்பை அதிகரிப்பதற்கு உதவுகிறது. இந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஆசிய நாணயங்களில் முன்னணியில் இந்திய ரூபாய் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு, 2024 பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடும்போது சரக்கு இறக்குமதி 12.2 சதவீதம் அதிகரித்து 60.11 பில்லியன் டாலராக உள்ளது. ஜனவரியில் இறக்குமதி 54.4 பில்லியன் டாராக இருந்தது.
இதே காலகட்டத்தில் ஏற்றுமதியில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 11.9 சதவீதம் அதிகரித்து 41.4 பில்லியன் டாலராக உள்ளது. ஜனவரியில் ஏற்றுமதி மதிப்பு 36.9 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி மாதத்தில் நாட்டின் சேவை ஏற்றுமதி 32.35 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 15.39 பில்லியன் டாலராகவும் இருந்தது. ஜனவரியில், சேவை ஏற்றுமதி 32.80 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 16.05 பில்லியன் டாலராகவும் இருந்தது.
செய்தியாளர்களிடம் பேசிய வர்த்தக செயலாளர் திரு. சுனில் பார்த்வால், பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி வளர்ச்சி இந்த நிதியாண்டின் 11 மாதங்களில் மிக அதிகமாக இருப்பதாகக் கூறினார்.
மேலும், 2023-24 நிதியாண்டில் ஒட்டுமொத்த ஏற்றுமதி கடந்த ஆண்டின் சாதனை ஏற்றுமதியை விட அதிகமாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.