IND vs AFG 3rd T20I: கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா!
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான கடைசி டி20 போட்டி தற்போது பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் செய்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி ரன் கணக்கை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஆட்டமிழக்க, கோலி கோல்டன் டக் முறையில் முதல் முறையாக ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு வந்த ஷிவம் துபே 1 ரன்னில் வெளியேறினார். முதல் 2 டி20 போட்டிகளில் இடம் பெறாத சஞ்சு சாம்சனுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இதில், அவர் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடிய நிலையில், அதிரடியாக விளையாட தொடங்கினர். இருவரும் பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினர்.
ரோகித் சர்மா 64 பந்துகளில் டி20 கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்தார். மேலும், 5 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இவரைப் போன்று அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் மட்டும் தொடர்ந்து ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க ரிங்கு சிங் 39 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 69 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரோகித் சர்மா 69 பந்துகளில் 11 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 121 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.
மேலும், இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 46 ரன்கள் எடுத்திருந்த போது ஒரு கேப்டனாக விராட் கோலியின் அதிக ரன்கள் சாதனையை முறியடித்தார். ஒரு கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் எம்.எஸ்.தோனி 1112 ரன்கள் குவித்துள்ளார். விராட் கோலி 1570 ரன்கள் எடுத்துள்ளார். ரோகித் சர்மா 46 ரன்கள் எடுத்திருந்த போது 1571 ரன்கள் எடுத்து விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். இந்தப் போட்டியில் அவர் 121 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஒரு கேப்டனாக மொத்தமாக 1646 ரன்கள் குவித்துள்ளார். இதையடுத்து நடந்த 2 சூப்பர் ஓவர்களில் ரோகித் சர்மா 6, 6 மற்றும் 1 என்றும், 2ஆவது சூப்பர் ஓவரில் 6, 4, 1 என்றும் ரன்கள் சேர்த்து மொத்தமாக 24 ரன்கள் சேர்த்தார்.