IND vs AFG : மாபெரும் வரலாற்று சாதனை படைத்த ரோஹித் சர்மா.. உலக அளவில் பிரம்மாண்ட டி20 ரெக்கார்டு
இந்தூர் : ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் உலக அளவில் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அவர் பங்கேற்ற நிலையில், மைல்கல் சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார்.
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டியுடன் சேர்த்து ரோஹித் சர்மா இதுவரை 150 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார். இதுவரை வேறு எந்த வீரரும் இத்தனை சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்கவில்லை. முன்னதாக அதிக டி20 போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா தான் வைத்திருந்தார். தற்போது மேலும் ஒரு மைல்கல் சாதனையாக 150 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்றும் உள்ளது. டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முதல் வீரராக 150 போட்டிகளில் ஆடியது ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர். 1987இல் ஆலன் பார்டர் முதல் வீரராக 150 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார். அதன் பின் 1993இல் முதல் நபராக 150 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார்.
கிரிக்கெட்டின் இரண்டு வெவ்வேறு விதமான போட்டிகளில் ஆலன் பார்டர் முதல் வீரராக 150 போட்டிகளில் ஆடிய நிலையில், ரோஹித் சர்மா டி20 வடிவ கிரிக்கெட் போட்டியில் முதல் வீரராக 150 போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். தனது 150 வது போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக இந்திய அணிக்கு வெற்றி தேடித் தருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.