IND vs AFG : சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தானை ஏமாற்றிய ரோஹித்? ரிடையர்ட் அவுட்டால் வெடித்த சர்ச்சை
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா சூப்பர் ஓவரில் ரிட்டையர்ட் அவுட் ஆனதில் விதிகளை காற்றில் பறக்கவிட்டு ஏமாற்றியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
முதல் சூப்பர் ஓவரில் ரோஹித் சர்மா ரிட்டையர்ட் அவுட் ஆகி விட்ட பின்னரும், அவர் மீண்டும் இரண்டாவது சூப்பர் ஓவரில் அவர் பேட்டிங் செய்ய வந்தது விதிப்படி தவறு என்றும், அம்பயர்கள் அவரை பேட்டிங் செய்யவே அனுமதித்து இருக்கக் கூடாது எனவும் பலரும் விதிகளை சுட்டிக் காட்டி சமூக ஊடகங்களில் விளாசி வருகின்றனர்.
இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 212 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 120, ரிங்கு சிங் 69 ரன்களக் குவித்து அசத்தினர். அடுத்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி போராடி 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்து போட்டியை சமன் செய்தது. இதை அடுத்து போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. ஐசிசி விதிப்படி வெற்றி கிடைக்கும் வரை சூப்பர் ஓவரில் இரண்டு அணிகளும் ஆட வேண்டும்.
அதே போல முதல் சூப்பர் ஓவரில் பந்து வீசியவர் அடுத்தடுத்த சூப்பர் ஓவர்களில் பந்து வீச அனுமதி இல்லை. ஒரு சூப்பர் ஓவரில் மூன்று பேட்ஸ்மேன்கள் வரை பேட்டிங் செய்யலாம். இரண்டு விக்கெட் வீழ்ந்தால் அந்த அணி சூப்பர் ஓவரில் ஆல் – அவுட் ஆனதாக கருதப்படும். மேலும், ஒரு சூப்பர் ஓவரில் அவுட் ஆன ஒருவர் அடுத்தடுத்த சூப்பர் ஓவர்களில் பேட்டிங் செய்ய அனுமதி இல்லை.
இந்த நிலையில், முதல் சூப்பர் ஓவரில் முகேஷ் குமார் பந்து வீசினார். ஆப்கானிஸ்தான் அணி 16 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்தனர். அப்போது கடைசி 1 பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில், ஒருவேளை சிங்கிள் ரன் எடுக்க வேண்டும் என்றால் தன்னால் வேகமாக ஓட முடியாது என முடிவு செய்த ரோஹித் சர்மா, தான் ரிட்டையர்ட் ஆவதாக அம்பயரிடம் தெரிவித்து விட்டு ரிங்கு சிங்கை அழைத்தார். அதன் பின் ஜெய்ஸ்வால் 1 ரன் மட்டுமே எடுக்கவே முதல் சூப்பர் ஓவரும் சமன் ஆனது.
அடுத்து இரண்டாவது சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது. அப்போது ரோஹித் சர்மா மீண்டும் பேட்டிங் செய்ய வந்தார். அது விதிப்படி தவறு. காரணம், அவர் முன்பே ரிட்டையர்ட் அவுட் ஆகி விட்டார். ஒரு வீரர் ரிட்டையர்ட் நாட் – அவுட் மட்டுமே ஆக முடியும். ஆனால், காயம் இருந்தாலோ, பேட்டிங் செய்ய முடியாத சூழ்நிலை இருந்தாலோ மட்டுமே ஒரு பேட்ஸ்மேன் ரிடையர்ட் நாட் அவுட் ஆக முடியும். அதே சமயம், அப்படி செய்யும் முன் எதிரணி கேப்டனின் ஒப்புதலை பெற வேண்டும்.
ஆனால், முதல் சூப்பர் ஓவரில் ரோஹித் சர்மா ரிட்டையர்ட் ஆகும் போது ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் இப்ராஹீம் சத்ரான் அது குறித்து அம்பயர்களிடம் தன் மறுப்பை தெரிவித்து கொண்டு இருந்தார். அப்படி என்றால் அவரின் ஒப்புதலை ரோஹித் சர்மா பெறவில்லை. இது நேரடியாக ரிட்டையர்ட் அவுட் என்றே கருதப்படும். அதாவது ஒரு பேட்ஸ்மேன் பேட்டிங் செய்ய மறுத்து வெளியேறினால் அது அவுட் என்றே கருதப்படும்.
அந்த வகையில் ரோஹித் சர்மா முதல் சூப்பர் ஓவரில் அவுட் ஆகி விட்டார். ஆனால், விதிப்படி ஒரு சூப்பர் ஓவரில் அவுட் ஆன பேட்ஸ்மேன் மீண்டும் பேட்டிங் செய்ய முடியாது. ஆனால், ரோஹித் மீண்டும் பேட்டிங் செய்தார். ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார். இந்தியா 5 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்தது. ரிங்கு சிங் கேட்ச் கொடுத்தும், ரோஹித் ரன் அவுட் ஆகியும் ஆட்டமிழந்தனர். இதை அடுத்து ஆப்கானிஸ்தான் மீண்டும் பேட்டிங் செய்ய வந்த போது ரவி பிஷ்னோய் வீசிய சூப்பர் ஓவரில் 1 ரன் மட்டுமே எடுத்து 2 விக்கெட்களை இழந்து ஆல் – அவுட் ஆகி தோல்வி அடைந்தது.
ஆனால், இதில் ரோஹித் சர்மா விதியும் மீறி மீண்டும் பேட்டிங் செய்தது தற்போது உறுதியாகி இருக்கிறது. அவர் ரிட்டயர்ட் நாட் அவுட் என்றால் அதற்கான காரணம் மற்றும் எதிரணி கேப்டனின் ஒப்புதலை பெறவில்லை. அதை வைத்தே அவரது நாட் அவுட் முடிவு செல்லாது என்பது தெளிவாகிறது. ஆப்கானிஸ்தான் இதை பற்றி பொதுவெளியில் பேசினால் இந்த விவகாரம் மேலும் பெரிதாகலாம்.