IND vs ENG : ஒவ்வொரு பந்திலும் 0.. ரொம்ப தப்பு.. சர்ஃபராஸ் கானை விளாசித் தள்ளிய ஜாம்பவான்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் அரைசதம் அடித்து அசத்தினார். ஆனால், அரை சதத்தை சதமாக மாற்றவில்லை. அவர் அவுட் ஆன விதம் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து இருக்கிறார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அடுத்து இந்திய அணி பேட்டிங்கில் அதிரடியாக ரன் குவித்தது. ஜெய்ஸ்வால் 57, ரோஹித் சர்மா 103, சுப்மன் கில் 110, தேவ்தத் படிக்கல் 65 ரன்கள் குவித்தனர்.
சர்ஃபராஸ் கான் தன் பங்கிற்கு 56 ரன்கள் சேர்த்தார். அவர் முதலில் நிதான ஆட்டம் ஆடி பின் வேகம் எடுத்தார். இரண்டாம் நாள் மாலை இடைவேளைக்கு பின் வீசப்பட்ட முதல் பந்தில் சர்ஃபராஸ் கான் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் மூலம் தனது மூன்றாவது அரைசதம் அடித்த கையோடு அவர் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் சுனில் கவாஸ்கர் இது குறித்து பேசுகையில் சர்ஃபராஸ் கான் செய்த தவறை சுட்டிக் காட்டி விமர்சித்ததோடு, கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் சொன்ன பேட்டிங் உத்தி ஒன்றை சர்ஃபராஸ் கானுக்கு அறிவுரையாக கூறி இருக்கிறார்.
“சர்ஃபராஸ் கான் ஆட்டமிழந்த பந்து அதிக தூரம் பிட்ச் செய்யப்பட்டு வந்தது. அவர் அதை அடிக்க முயன்று அதற்கான விலையை கொடுத்தார். தேநீர் இடைவேளைக்கு பின் முதல் பந்தை நீங்கள் விளையாடும் போது இப்படி செய்து இருக்கிறீர்கள். இது குறித்து நீங்களே சிந்தித்து பாருங்கள். டான் பிராட்மேன் எனக்கு சொன்ன அறிவுரை ஒன்றை சொல்கிறேன். “நான் 200 ரன்கள் அடித்து இருந்தாலும் நான் சந்திக்கும் ஒவ்வொரு பந்தையும் நான் 0-வில் இருப்பதாக நினைத்து தான் ஆடுவேன்” என்று கூறினார்” என்றார் சுனில் கவாஸ்கர்.