IND vs ENG: 2 தோல்வியால் ஒன்றும் மாறிவிடாது.. இந்திய மண்ணில் வென்று காட்டுவோம்.. பென் ஸ்டோக்ஸ் சவால்

இந்திய அணிக்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றுவோம் என்று இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து அணி பேஸ் பால் அணுகுமுறைக்கு பின் முதல்முறையாக இப்படியான தோல்வியை அடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் களத்திலேயே நம்பிக்கை தகர்ந்து இங்கிலாந்து வீரர்கள் உற்சாகமின்றி காணப்பட்டனர்.

பேஸ் பால் அணுகுமுறையில் ஆடி வரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல்முறையாக எதிரணி தரப்பில் டிக்ளேர் செய்யப்பட்டது. ஸ்பின்னர்களின் தரம், பேட்ஸ்மேன்களின் பேட்டிங் ஃபார்ம், இளம் வீரர்களுக்கு எதிரான திட்டமிடல் என்று இங்கிலாந்து அணியின் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. ஜோ ரூட், டாம் ஹார்ட்லி, ரெஹான் அஹ்மத் ஆகியோரால் பந்துவீச்சில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

இந்த தோல்விக்கு குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், முதல் இன்னிங்ஸில் பென் டக்கெட்டின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. அப்படியான ஒரு ஆட்டத்தை தான் நாங்கள் அனைவருமே விளையாட முயற்சித்தோம். முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் ரன்களை எட்டுவதும், வாய்ப்புகளை தேடிவதும் மட்டுமே திட்டமாக இருந்தது. நாங்கள் நேற்று பவுலிங் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தோம்.

ஆனால் நாங்கள் திட்டமிட்டதற்கு முன்பாகவே ஆல் அவுட்டானதால், வேகமாகவே பவுலிங் செய்ய களமிறங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. சில நேரங்களில் திட்டங்கள் களத்தில் தோல்வியடையும். அதுதான் எங்களுக்கு இந்த போட்டியில் நடந்துள்ளது. அனைவருக்கும் பேஸ் பேல் விஷயத்தில் கருத்துகள் இருக்கலாம், பார்வைகள் மாறுபடலாம். ஆனால் ஓய்வறையில் உள்ள வீரர்களின் எண்ணமே எங்களுக்கு முக்கியம்.

1-2 என்ற நிலையில் டெஸ்ட் தொடர் உள்ளது. இன்னும் நாங்கள் கம்பேக் கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. அடுத்த 2 போட்டிகளில் வென்று தொடரை வெல்ல முடியும். இந்த போட்டியில் அடைந்த தோல்வியை கடந்து வருகிறோம். அடுத்த 2 போட்டிகளில் வென்று, தொடரை கைப்பற்ற என்ன செய்ய வேண்டுமோ, அதனை செய்வோம் என்று கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *