IND vs ENG 3rd Test: கையில் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்: ஏன் தெரியுமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும், சர்ஃப்ராஸ் கான் 62 ரன்களும், துருவ் ஜூரெல் 46 ரன்களும் எடுத்துக் கொடுக்க 445 ரன்கள் குவித்தது. பின்னர், முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், அஸ்வின் செய்த தவறால் இங்கிலாந்து அணி 5 ரன்களுடன் பேட்டிங்கை தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அதிரடியாக விளையாட ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

விக்கெட்டிற்காக அழைக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 2ஆவது ஓவரிலேயே ஜாக் கிராவ்லி விக்கெட்டை கைப்பற்றி கொடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500ஆவது விக்கெட்டை கைப்பற்றி கொடுத்தார். 2ஆம் நாள் போட்டிக்கு பிறகு அஸ்வின் குடும்ப அவசர சூழல் காரணமாக 3ஆவது போட்டியிலிருந்து விலகியுள்ளார். இவருக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தான் இந்திய வீரர்கள் இன்றைய 3ஆம் நாள் ஆட்டத்தில் கையில் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடி வருகின்றனர். இது குறித்து பிசிசிஐ எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் காலமான இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்தியாவின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருமான தத்தாஜிராவ் கெய்க்வாட்டின் நினைவாக, இந்திய அணியினர் கையில் கருப்பு பட்டை அணிந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணிக்காக விளையாடிய தத்தாஜிராவ் கெய்க்வாட் 11 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். இதில், மொத்தமாக 350 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு முறை மட்டுமே அரைசதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 13 ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக தனது 95ஆவது வயதில் காலாமானார். இந்த நிலையில் தான் அவரது நினைவாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையில் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடி வருகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *