IND vs ENG : இந்த வேலை எல்லாம் இங்க வேணாம்.. ஏமாற்றப் பார்த்த இங்கிலாந்து வீரர்.. உஷாரான அம்பயர்
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அதிரடி ரன் குவிப்பை தடுக்க முடியாமல் திணறியது இங்கிலாந்து அணி. ரோஹித் சர்மா – சுப்மன் கில் ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறிய நிலையில், அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க் உட் ஒரு உத்தியை செயல்படுத்தப் பார்த்தார். ஆனால், அம்பயர் உஷாராக இருந்து அவரை பந்து வீசச் செய்தார். என்ன நடந்தது?
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 218 ரன்கள் சேர்த்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 57 ரன்கள் குவித்து வெளியேறினார். அதன் பின் ரோஹித் சர்மா – சுப்மன் கில் இணைந்து சரமாரியாக ரன் குவித்தனர்.
இந்த நிலையில் 38வது ஓவரின் போது பழைய பந்தை மாற்றி புதிய பந்தை வாங்க முடிவு செய்தார் மார்க் உட். புதிய பந்து ஸ்விங் ஆகும் என்பதால் அவர் பந்தை மாற்ற நினைத்தார். ஆனால், பந்து மோசமான நிலையை எட்டினால் மட்டுமே அம்பயர்கள் பந்தை மாற்ற ஒப்புக் கொள்வார்கள். பந்து வட்ட வடிவத்தை இழந்தால் பந்தை மாற்ற முடியும். அதை சரி பார்க்க அம்பயரிடம் ஒரு உபகரணம் இருக்கும். அதில் பந்தை நுழைத்துப் பார்க்கும் போது பந்து சரியாக உள்ளே சென்று வெளியே வந்தால் பந்தை மாற்ற முடியாது. எனினும், சில அம்பயர்கள் அதை சரி பார்க்காமல் கூட பந்தை மாற்ற ஒப்புக் கொள்வார்கள்.
மார்க் உட் 38வது ஓவரின் இரண்டாவது பந்தை வீசிய பின் பந்து சேதமடைந்து விட்டதாக அம்பயரிடம் முறையிட்டார். ஆனால், உஷாரான அம்பயர் பந்தை வாங்கி பரிசோதித்தார். பின்னர் பந்தின் வட்ட வடிவத்தை சரி பார்த்த அவர், பந்து சரியாக இருப்பதை உறுதி செய்து மார்க் உட்-இடம் பந்தை மாற்ற முடியாது என தெரிவித்தார்.
மார்க் உட் செய்த உத்தி வெற்றி பெறாத நிலையில் இந்திய அணி வீரர்கள் ரன் குவித்து தள்ளினர். ரோஹித் சர்மா 103, சுப்மன் கில் 110, தேவ்தத் படிக்கல் 65, சர்ஃபராஸ் கான் 56 ரன்கள் குவித்தனர். இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் குவித்து இருந்தது. இங்கிலாந்து அணியை விட 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.