IND vs ENG : சொல்ல சொல்ல கேட்காத அஸ்வின்.. 5 ரன்களுக்கு ஆப்பு வைத்த அம்பயர்.. கடுப்பான ரோகித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் பிட்சில் ஓடியதால், அம்பயர் வில்சன் இந்திய அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் சேர்த்தது. நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கி நடந்து வருகிறது.
இதையடுத்து ஜடேஜா – குல்தீப் யாதவ் இருவரும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். ஆனால் இங்கிலாந்து பவுலர்கள் விரைவாக இந்திய அணியை ஆல் அவுட் செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆக்ரோஷமாக பந்துவீசியது. இதன் காரணமாக 2வது நாள் ஆட்டத்தின் 4வது ஓவரிலேயே குல்தீப் யாதவ் 4 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் ஜடேஜா 112 ரன்களில் வெளியேறினார்.
இதனால் இந்திய அணி 331 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் அறிமுக வீரர் துருவ் ஜுரெல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் இணைந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த நிலையில் ரெஹான் அஹ்மத் வீசிய 102வது ஓவரின் 4வது பந்தில் அஸ்வின் ஒரு ரன் எடுக்க முயற்சி செய்து, பிட்சின் நடுப்பகுதியில் ஓடினார். இதனை கவனித்த அம்பயர் வில்சன், உடனடியாக இந்திய அணிக்கு 5 ரன்களை அபராதமாக விதித்தார்.
இது அஸ்வினுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அனுமதிக்கப்பட்ட 5 மீட்டருக்குள் தான் நான் ஓடி வந்தேன் என்று அம்பயருடன் பேசினார். ஆனால் அஸ்வினின் வார்த்தைகளை ஏற்காத நடுவர்கள், இங்கிலாந்து அணி பேட்டிங்கின் போது 5 ரன்களுடன் தான் பேட்டிங்கை தொடங்குவார்கள் என்று திட்டவட்டமாக கூறினர். இதனை ஓய்வறையில் நின்று பார்த்து கொண்டிருந்த ரோகித் சர்மா கோபத்தை பார்வையிலேயே வெளிப்படுத்தினார்.
அதேபோல் 5 ரன்கள் அபராத நடவடிக்கைக்கு அஸ்வின் மட்டும் காரணமில்லை. முதல் நாள் ஆட்டத்திலும் இந்திய அணியின் சில பேட்ஸ்மேன்கள் பிட்சின் நடுப்பகுதியில் ஓடி அம்பயரால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். தொடர் செயல்பாடுகளின் காரணமாகவே 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா பிட்சின் நடுவில் ஓடிய போது, இந்திய அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.