IND vs ENG : போச்சா.. அஸ்வின் கொடுத்த வார்னிங்.. கேட்காத ரோகித் சர்மா.. பறிபோன டிஆர்எஸ் சான்ஸ்!
இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினின் பேச்சை கேட்காமல் கேப்டன் ரோகித் சர்மா டிஆர்எஸ் முறையீடு செய்தது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி தரப்பொல் இளம் வீரர் ஆகாஷ் தீப் அறிமுகம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கிராலி – டக்கெட் கூட்டணி இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் கொடுத்தது.
இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை சிராஜ் வீச, 2வது ஓவரிலேயே அறிமுகம் செய்யப்பட்டார் ஆகாஷ் தீப். இதில் சிராஜ் அதிக ரன்களை விட்டுக் கொடுக்க, மறுமுனையில் ஆகாஷ் தீப் பிட்சின் உதவியுடன் சிறப்பாக பவுலிங் செய்தார். இதன் பலனாக தொடக்க வீரர் பென் டக்கெட்டை 11 ரன்களில் வீழ்த்தி தனது முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்தினார்.
தொடர்ந்து வந்த போப் அதே ஓவரின் 4வது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேற, இங்கிலாந்து அணி 47 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜோ ரூட் ஆகாஷ் தீப் வீசிய முதல் பந்திலேயே டபிடபிள்யூ ஆனார். இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கள நடுவரிடம் அப்பீல் செய்தனர்.
ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. இதையடுத்து கேப்டன் ரோகித் சர்மாவிடம், இளம் பவுலர் ஆகாஷ் தீப் டிஆர்எஸ் அப்பீல் கோர அறிவுறுத்தினார். அப்போது விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெலும் ஆகாஷ் தீப் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் அருகில் நின்றிருந்த அனுபவ வீரர் அஸ்வின், உடனடியாக ரோகித் சர்மாவிடம் டிஆர்எஸ் எடுக்க வேண்டாம் என்று கூறினார்.
அந்த பந்து ஜோ ரூட்டின் பேட்டில் பட்டு காலில் அடித்ததாக கூறினார். இருப்பினும் அஸ்வினின் பேச்சை கேட்காத ரோகித் சர்மா, உடனடியாக டிஆர்எஸ் அப்பீலுக்கு சென்றார். அதில் ஆகாஷ் தீப் வீசிய பந்து அவுட்சைட் ஆஃப் லெந்தில் பிட்ச்சானது தெரிய வந்தது. இதனால் இந்திய அணி ஒரு டிஆர்எஸ் வாய்ப்பை இழந்தது. அஸ்வினின் பேச்சை கேட்காமல் ரோகித் சர்மா முடிவு செய்ததது இந்திய அணியின் பாதிப்புக்கு காரணமாக மாறியது.