IND vs ENG: ராஞ்சியில் இன்று மழைக்கு வாய்ப்பு? நான்காவது டெஸ்ட் டிரா ஆக முடியுமா? சிக்கலில் இந்திய அணி!
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் ராஞ்சியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக நட்சத்திர வீரர் ஜோ ரூட் 122 ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் இளம் வீரர் துருவ் ஜுரெல் 30 ரன்களும், குல்தீப் யாதவ் 17 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், ஜுரெல் மற்றும் குல்தீப் இணைந்து ஓரளவிற்கு இந்திய அணியை மீட்டனர்.
இருப்பினும் இந்திய அணி இன்னும் 134 ரன்கள் பின் தங்கியுள்ளது. இதனால் 3வது நாளில் இந்திய அணி விரைவாக ஆல் அவுட்டாகும் பட்சத்தில் மிகப்பெரிய சிக்கலில் சிக்கும். ஏனென்றால் ராஞ்சி பிட்ச் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகியுள்ள நிலையில், பவுன்ஸும் குறைவாக உள்ளது. இதனால் முதல் இன்னிங்ஸிலேயே 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றால், இங்கிலாந்து அணியால் எளிதாக 250 ரன்களை இலக்காக நிர்ணயிக்க முடியும்.
ஆனால் ராஞ்சி ஆடுகளத்தில் நான்காவது இன்னிங்சில் 250 ரன்கள் இலக்கை துரத்துவது எளிதல்ல. இதிலிருந்து இந்திய அணி தோற்கும் வாய்ப்புகள் அதிகம் என்பது தெரிகிறது. இந்நிலையில் ராஞ்சியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று மட்டுமின்றி நான்காம் நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் ராஞ்சி முழுவதும் மழை பெய்யாமல், ராஞ்சியின் சில பகுதிகளில் மட்டும் மழை பெய்யும் என்பது செய்தி. மழை பெய்தால் நான்காவது டெஸ்ட் டிராவில் முடியும். மழை வந்து இந்திய அணிக்கு டிரா செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.