IND vs ENG : தோனியின் சொந்த மண்ணில்.. இன்னொரு தோனி உருவாகிறார்.. இளம் வீரரை பாராட்டிய கவாஸ்கர்!

இந்திய இளம் வீரர் துருவ் ஜுரெல்லின் புத்திசாலித்தனமான ஆட்டத்தை பார்க்கும் போது அடுத்த எம்எஸ் தோனி உருவாகி வருவதை பார்க்க முடிவதாக கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்தில் இருந்த துருவ் ஜுரெல், டெய்லெண்டர்களுடன் இணைந்து இந்திய அணியின் ஸ்கோரை 307 ரன்களுக்கு கொண்டு வந்துள்ளார். சிறப்பாக ஆடிய துருவ் ஜுரெல் 90 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

டெய்லெண்டர்களுடன் இணைந்து எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்று மிக இள வயதிலேயே துருவ் ஜுரெல் அறிந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்திய அணிக்காக 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர், சொந்த மண்ணில் இந்திய அணியை ஒற்றை ஆளாக காப்பாற்றியுள்ளார்.

டெய்லெண்டர்களை எப்போது விளையாட வைக்க வேண்டும், எப்படி ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்று துருவ் ஜுரெல் சரியாக கணக்கிட்டு விளையாடி இருந்தார். ஜடேஜாவுக்கு கைகூடாத அறிவுக்கூர்மை, துருவ் ஜுரெலுக்கு இருந்தது தான் ரசிகர்களின் வியப்பாக உள்ளது. இதனிடையே தோனியின் சொந்த மண்ணில் இளம் விக்கெட் கீப்பர் அவரை போலவே டெய்லெண்டர்களுடன் இந்திய அணியை காப்பாற்றியுள்ளார்.

இதனால் பலரும் தோனியை பார்த்தது போல் இருந்ததாக துருவ் ஜுரெலை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வர்ணனையின் போது, கிரிக்கெட் பற்றிய துருவ் ஜுரெல்லின் அணுகுமுறையும், ஆட்டத்தின் போக்கை கணித்து ஷாட்களை விளையாடுவதும் ஆச்சரியமாக உள்ளது.

துருவ் ஜுரெல்லை பார்க்கும் போது அடுத்த எம்எஸ் தோனி உருவாகுவதை போல் தோன்றுவதாக பாராட்டியுள்ளார். தோனியின் தீவிர ரசிகரான துருவ் ஜுரெல், தோனியை போலவே அதிரடி மற்றும் கீழ் வரிசை பேட்ஸ்மேனாக இருக்கிறார். அதேபோல் ஸ்பின் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள தேவையான திறமையும் இருப்பதால், இந்திய அணி தரமான விக்கெட் கீப்பரை கண்டறிந்துவிட்டதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், சுனில் கவாஸ்கரும் தோனியின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *