IND vs ENG : நம்பர் 1 பவுலரை இறக்கும் இந்திய அணி.. இங்கிலாந்து அணிக்கு சோலி முடிந்தது
மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சை மேலும் பலப்படுத்த உள்ளது. கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் அடையலாம் என நினைத்த இங்கிலாந்து அணிக்கு மரண அடி கொடுக்க இந்தியா தயாராகி இருக்கிறது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதன் முடிவில் இந்திய அணி 3 – 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது. இதை அடுத்து இங்கிலாந்து அணி கடும் விமர்சனத்தை சந்தித்து உள்ளது. அதனால், ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டியில் வெற்றி பெற திட்டமிட்டு வருகிறது இங்கிலாந்து அணி.
நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பும்ராவுக்கு ஓய்வு அளித்து இருந்தது. அதனால் தான் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் குவித்தது என்ற விமர்சனத்தை இந்தியா சந்தித்தது. தற்போது உலகின் நம்பர் 1 வேகப் பந்துவீச்சாளர் பும்ரா ஓய்வு முடிந்து அணிக்கு திரும்ப இருக்கிறார்.
ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா பங்கேற்பது உறுதி என கூறப்படுகிறது. அவருக்கு வழிவிட்டு முகமது சிராஜ்-க்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்வதில் சில இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சிரமம் உள்ளது. குறிப்பாக அந்த அணியின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஜோ ரூட் பும்ரா ஓவர்களில் திணறுகிறார். எனவே, பும்ராவின் வருகையால் இங்கிலாந்து அணி ஐந்தாவது போட்டியில் வெற்றி பெறுவது கடினமே.
நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ்தீப், ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் களமிறங்குவார் என கூறப்படுகிறது. பேட்ஸ்மேன்களில் ரஜத் படிதார் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் இடம் பெறக் கூடும். ரஜத் சரியாக ரன் குவிக்காத நிலையில் இது அணிக்கு நல்ல மாற்றமாகவே பார்க்கப்படுகிறது.