IND vs ENG : இதுலாம் ஒரு இலக்கா.. 600 ரன்கள்னாலும் அசராமல் அடிப்போம்.. திமிராக பேசிய ஆண்டர்சன்!
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 600 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் நிச்சயம் சேஸிங் செய்வோம் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 399 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 3வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளது. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமிருக்கும் சூழலில், இங்கிலாந்து அணி 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உள்ளது.
பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து இங்கிலாந்து அணி சேஸிங் செய்த 11 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றிகரமாக சேஸ் செய்துள்ளது. அதிலும் 2022ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக 378 ரன்களை விரட்டி அபார வெற்றியை பெற்றது. இதனால் 399 ரன்கள் இலக்கு போதுமானதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 2ஆம் நாள் ஆட்டத்திற்கு பின் பயிற்சியாளர் மெக்கல்லத்துடன் ஆலோசனை நடைபெற்றது. அப்போது அனைத்து வீரர்கள் முன்பாக நின்று மெக்கல்லம், இந்திய அணி 600 ரன்களை கூட முன்னிலை பெறட்டும். எவ்வளவு பெரிய இலக்கை நிர்ணயித்தாலும், நாம் அதனை சேஸ் செய்கிறோம் என்று கூறினார். அவர் கூறியதை தான் நாங்கள் முயற்சித்து, முடிக்க காத்திருக்கிறோம்.
இந்த போட்டியை பொறுத்தவரை நான் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினேன் என்பதை விடவும், 35 ஓவர்கள் வீசியது தான் மகிழ்ச்சியாக உள்ளது. ஏனென்றால் ஆஷஸ் தொடரில் என்னால் பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை. 35 ஓவர்கள் வீசிய போதும், நான் வலிமையாக உணர்கிறேன். அதுதான் எனக்கு மன நிறைவை கொடுத்துள்ளது. இந்திய மண்ணில் வேகப்பந்துவீச்சாளராக விளையாடுவது சாதாரண விஷயம் கிடையாது. இதற்காக ஃபிட்னஸ் ரீதியிலும் நான் பணியாற்றினேன்.
4ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியில் பதற்றத்தை காண முடியும் என்று நம்புகிறேன். அவர்களின் பேட்டிங்கின் மூலம் அது வெளிப்படையாக தெரிந்தது. இந்திய அணிக்கு எவ்வளவு ரன்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்பது தெளிவாக தெரியவில்லை. கூடுதல் எச்சரிக்கையுடன் தான் விளையாடினார்கள். 143 ரன்கள் என்ற பெரிய முன்னிலையை பெற்ற போது, அவ்வளவு எச்சரிக்கை இருந்தது என்று தெரிவித்துள்ளார்.