IND vs ENG : ஜடேஜா, கோலி, பும்ரா.. வேலையைக் காட்டிய ஜேம்ஸ் ஆண்டர்சன்.. இந்தியா வரும் ரகசியம் இதுதான்

இங்கிலாந்து அணியின் மூத்த வீரரான வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தன் 41வது வயதில் இந்தியாவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க வருகிறார். நியாயமாக அவர் கடந்த ஆண்டே ஓய்வு பெற்று இருக்க வேண்டும். ஆனால், இந்திய அணிக்கு எதிராக அவருக்கு இருக்கும் பழைய பகையை தீர்க்கவே அவர் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆட வருகிறார் என ஒரு பேச்சு உள்ளது.

இந்த பகை சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. அப்போது 2012இல் இந்தியா வந்த இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றி இருந்தது, அப்போது இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் அதிக விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், அவர் அந்த தொடர் முழுவதும் இந்திய பேட்ஸ்மேன்களை திட்டியபடியே இருந்தார். அது அப்போது லேசாக புகைச்சலை கிளப்பியது.

அதன் பின் 2014இல் தோனி தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து சென்ற போது ரவீந்திர ஜடேஜாவை ஆண்டர்சன் திட்டியதாகவும், அதற்கு ஜடேஜா அவருடன் வாக்குவாதம் செய்ததாகவும், ஆண்டர்சன் அவரை தள்ளிவிட்டதாகவும் மாற்றி மாற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் புகார்கள் கொடுக்கப்பட்டன. அதன் முடிவில் ஜடேஜாவுக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது. ஆண்டர்சன் எந்த தவறும் செய்யவில்லை எனக் கூறப்பட்டதால் அந்த தொடர் முழுவதும் இந்த விவாகரத்தால் இரு அணி வீரர்களும் மாறி மாறி சீண்டினர்.

அடுத்து 2014இல் இந்திய அணி, இங்கிலாந்து சென்ற போது ஆண்டர்சன், விராட் கோலி விக்கெட்டை நான்கு முறை வீழ்த்தி இருந்தார். ஆனால், 2016இல் இங்கிலாந்து அணி இந்தியா வந்த போது விராட் கோலி அதிரடியாக ரன் குவித்தார். அப்போது அதை ஏற்றுக் கொள்ள முடியாத ஆண்டர்சன், கோலி பேட்டிங்கில் நிறைய தவறுகள் இருந்தாலும் இந்திய ஆடுகளங்கள் அதை மறைத்து விடுகின்றன என தொடரின் இடையே ஒரு பேட்டியில் கூறினார். அதனால், பொறுமை இழந்த அஸ்வின், ஆண்டர்சன் பேட்டிங் செய்ய வந்த போது, “நீங்கள் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத நபர்” என அவரிடம் கூறினார். அதனால் பரபரப்பு எழுந்தது.

அடுத்து கடைசியாக 2012இல் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள், ஆண்டர்சன் இடையே பனிப்போர் வெடித்தது. குறிப்பாக பும்ராவுக்கும், ஆண்டர்சனுக்கும் மோதல் உச்சத்தை எட்டியது. பும்ரா, ஆண்டர்சனுக்கு சில பவுன்சர்களை வீசினார். அது அவரைத் தாக்கியது. அதனால், கடுப்பான ஆண்டர்சன், அடுத்து இந்தியா பேட்டிங் செய்த போது அனைத்து பேட்ஸ்மேன்களுடனும் வாக்குவாதம் செய்ததோடு, பவுன்சர்களை வீசி அவர்களை தாக்கினார்.

ஆனால், அந்தப் போட்டியில் இரண்டாம் இன்னிங்க்ஸில் ஆண்டர்சனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பும்ரா 34, முகமது ஷமி 52 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க காரணமாக இருந்தனர். அந்தப் போட்டியில் இந்தியா வெற்றியும் பெற்றது.

இந்த நிலையில், தன் 41 வயதில் ஓய்வு பெறாமல் கடைசியாக ஒருமுறை இந்திய அணியுடன் மோத வருகிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன். அவர் மோதிய அனைத்து வீரர்களும் இன்னும் இந்திய அணியில் தான் இருக்கின்றனர். அவருக்கு இந்தியா கடைசியாக பாடம் புகட்டுமா? பார்க்கலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *