IND vs ENG – பேய் அடி அடித்த ஜெய்ஸ்வால், ரோகித்.. விட்ருங்க அண்ணா என கதறிய இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர். இந்தத் தொடரை ஏற்கனவே இந்தியா மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இங்கிலாந்து அணி வெற்றியுடன் தொடரை முடிக்க வேண்டும் என்று போராடி வருகிறது.
குறிப்பாக இந்த தொடரில் பேஸ் பால் என்ற அதிரடியாக விளையாடும் யுத்தியை பயன்படுத்தி வெற்றி பெறப் போகிறோம் என இங்கிலாந்து கூறிய நிலையில், அது கொஞ்சம் கூட பலன் அளிக்காமல் போனது.
இந்த நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வழக்கம்போல் தடுமாறியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜாக் கிராலி, பென் டக்கட் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தனர். ஆலி போப் 11 ரன்களிலும், ஜோ ரூட் 26 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். தன்னுடைய நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜானி பாரிஸ்டோ இரண்டு சிக்சர் இரண்டு பவுண்டரி என அதிரடியாக ஆட ஆரம்பித்து 29 ரன்களில் வெளியேறினார்.
இதைப் போன்று கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டக் அவுட் ஆனார். ஜாக்கிராலி மட்டும் அதிகபட்சமாக 79 ரன்கள் சேர்க்க இங்கிலாந்து அணி 218 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தன்னுடைய நூறாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற அஸ்வின் நான்கு விக்கெட்டுகளையும், குல்திப்பியாவும் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதனை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடியது. பேஸ்பால் என்றால் எப்படி ஆட வேண்டும் என்று இங்கிலாந்து அணி வீரர்களுக்கு இந்தியா பாடம் எடுத்தது போல் அதிரடி காட்டின. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் அடித்த ஆட ஆரம்பித்தனர். ஆண்டர்சனின் முதல் நான்கு ஓவர்களில் கொஞ்சம் பொறுமை காத்த இந்திய அணி அடுத்ததாக ஆக்ரோஷ தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால் இங்கிலாந்து அணி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தது. குறிப்பாக அதிரடி வீரர் ஜெய்ஸ்வால் 58 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். இதில் மூன்று இமாலய சிக்சர்களும், ஐந்து பவுண்டரிகளும் அடங்கும். இந்த நிலையில் சோயுப் பஷீர் ஓவரில் ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்தார். எனினும் மற்றொரு தொடக்க வீரரான ரோகித் சர்மாவும் அதிரடி காட்டினார். 83 பந்துகளை எதிர் கொண்ட ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்திருக்கிறார்.
இதில் ஆறு பவுண்டரி 2 சிக்சர் அடங்கும். சுப்மன் கில் 26 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். அவரும் தன் பங்கிற்கு இரண்டு பவுண்டரி இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். இதனால் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது தற்போது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் விட இந்திய அணி 83 ரன்கள் தான் பின்தங்கி இருக்கிறது. இந்தியாவில் இந்த அதிரடி ஆட்டத்தை கொஞ்சம் கூட இங்கிலாந்து எதிர்பார்க்கவில்லை.