IND vs ENG : இடதுகை பேட்ஸ்மேன்களே.. அஸ்வினிடம் கூடுதல் ஜாக்கிரதை தேவை.. சாதித்து காட்டிய தமிழக வீரர்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 250வது முறையாக இடதுகை பேட்ஸ்மேனை வீழ்த்தி இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 500வது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 9வது வீரர் என்ற சாதனையையும், இந்திய கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்கு பின் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதனிடையே 2வது நாள் ஆட்டம் முடிவடைந்த பின் திடீரென ரவிச்சந்திரன் அஸ்வின் அவசர அவசரமாக சென்னை திரும்பினார். அவரின் தாயார் உடல்நிலை மோசமாகியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து 3வது நாள் ஆட்டத்தில் பங்கேற்காத அஸ்வின், 4வது நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின் போது இந்திய வீரர்களுடன் இணைந்து களமிறங்கினார்.
அஸ்வினுக்காக பிரத்யேக விமானம் ஒன்றை அனுப்பி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அவர் ராஜ்கோட் அழைத்து வந்தார். அஸ்வினின் குடும்ப உறுப்பினர்கள் பிரச்சனைக்காக பிசிசிஐ அனைத்து உதவிகளையும் செய்தது. அதுமட்டுமல்லாமல் 4வது நாள் ஆட்டத்தில் பவுலிங் செய்த அஸ்வின், இடதுகை பேட்ஸ்மேனான டாம் ஹார்ட்லியின் விக்கெட்டை வீழ்த்தினார்.
2வது இன்னிங்ஸில் 6 ஓவர்களை வீசிய அஸ்வின் 19 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 250வது முறையாக இடதுகை பேட்ஸ்மேனின் விக்கெட்டை கைப்பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். மொத்தமாக 501 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின், 251 வலதுகை பேட்ஸ்மேன்கள் மற்றும் 250 இடதுகை பேட்ஸ்மேன்களை வீழ்த்தியுள்ளார்.
ஏற்கனவே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை இடதுகை பேட்ஸ்மேன்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். தாயார் உடல்நிலை சரியில்லாத போது இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி சாதனை படைத்துள்ள அஸ்வினின் செயல்கள் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.