IND vs ENG – இந்திய வரலாற்றில் வெறும் 3 பேர் தான்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா மாபெரும் சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா சாதனை சதம் அடித்தாலும் ரசிகர்கள் அவர் மீது பல காரசாரமான விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 326 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி 33 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. இதனால் 150 ரன்கள் கூட இந்தியா தொடுமா என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஜோடி அபாரமாக விளையாடி நான்காவது விக்கெட்டுக்கு 204 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோகித் சர்மா 131 ரன்கள் ஆட்டம் இழந்த பிறகும் ஜடேஜா மற்றும் சர்பிராஸ் கான் பொறுப்பாக விளையாடி அணியை கட்டமைத்தனர். இந்த நிலையில் சர்பிராஸ் கான் 62 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜாவின் தவறான முடிவால் ரன் அவுட் ஆனார்.
இதனால் ஜடேஜாவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய நான்காவது சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். இது மட்டுமல்லாமல் ஜடேஜா ஆட்டநேரம் முடிவில் 110 ரன்கள் எடுத்திருக்கிறார். இதன் மூலம் ஒரு மிகப்பெரிய சாதனைக்கு ஜடேஜா சொந்தக்காரராக இருக்கிறார்.
அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 3000 ரன்கள் பந்துவீச்சில் 250 விக்கெட் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்று இருக்கிறார். இதற்கு முன்பாக கபில்தேவ் பேட்டிங்கில் 5248 ரன்களும், பந்துவீச்சில் 434 விக்கெட்டுகளும் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார்.
இரண்டாவது இடத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேட்டிங்கில் 3271 ரன்களும் பந்துவீச்சில் 499 விக்கெட்டுகளையும் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்த நிலையில் ஜடேஜா தற்போது பேட்டிங்கில் 33 ரன்களும் பந்து வீச்சில் 280 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இந்தத் தொடரில் ஜடேஜா இன்னும் 20 விக்கெட்டுகளை எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் இணைந்து விடுவார்.