IND vs ENG – கோல்டன் டக்கான சர்பராஸ் கான்.. தேவையில்லாத பிரஷரை ஏற்றிவிட்ட சேவாக்.. பாவம் யா நீ!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முதலில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுக்க இந்திய அணி 307 ரன்களை குவித்து இருக்கிறது.
இதனை அடுத்து 46 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் என்ற ஸ்கோருடன் நான்காவது நாள் ஆட்டத்தை தொடங்கியது.
இதில் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெய்ஸ்வால் 37 ரன்களில் வெளியேறினார். இதனை அடுத்து கேப்டன் ரோகித் சர்மாவும் அரை சதம் கடந்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் ரஜத் பட்டிதார் டக் அவுட் ஆனார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜாவும் 4 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி தடுமாற்றத்தை கண்டது. அப்போது களத்திற்கு சர்பராஸ்கான் வந்தார். சர்பராஸ்கான் மீது தேவையில்லாத சர்ச்சைகள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளத்தில் கிளம்பியது. சர்பராஸ்கானுக்கு மட்டும் ஊடகங்கள் வெளிச்சமும் கொண்டாட்டமும் செய்யப்படுகிறது.
ஆனால் மற்ற வீரர்களுக்கு அந்த நிலை இல்லை என பலரும் வெளிப்படையாகவே குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் முன்னாள் வீரர் சேவாக்கும் மறைமுகமாக விமர்சித்து டிவீட் போட்டு இருந்தார். இதனால் சர்பராஸ் கான் ரன் குவித்தே ஆக வேண்டும் என்ற தேவையில்லாத அழுத்தம் அவர் மீது ஏற்பட்டது. ஒரு இன்னிங்ஸில் சொதப்பினால் கூட நம்மை விமர்சிக்க ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்ற ஒரு அழுத்தம்.
இன்னொரு பக்கம் ஆட்டத்தில் இந்தியா அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. இந்த கட்டத்தில் விளையாடிய சர்பராஸ் கான் முதல் பந்திலே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 120 ரன்கள் என்ற ஸ்கோரில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சர்ஃபராஸ் கானுக்கு தேவையில்லாத அழுத்தத்தை சிலர் ஏற்படுத்துவதாகவும் இது எல்லாம் மீறிதான் அவர் ஜெயிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் சர்பராஸ், இதைக் குறித்து எல்லாம் காதில் வாங்காமல் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று ரசிகர்களும் வலியுறுத்தியுள்ளனர்.