IND vs ENG : ஸ்ரேயாஸ் தான் காப்பாற்றினார்.. சதம் அடிக்க காரணமே அவர் தான்.. சுப்மன் கில் ஓபன் டாக்!
இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் தான் சதம் விளாசுவதற்கு முக்கிய காரணம் என்று இளம் வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி வெற்றிபெற 399 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 143 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்ஸில் எப்படி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி காப்பாற்றினாரோ, அதேபோல் 2வது இன்னிங்ஸில் சுப்மன் கில் காப்பாற்றினார்.
சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 3வது சதத்தை விளாசி அசத்தினார். 11 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் சோதித்து வந்த சுப்மன் கில், சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்துள்ளார். இதன் மூலம் நம்பர் 3 வரிசையில் இன்னும் சில ஆண்டுகள் சுப்மன் கில் களமிறங்குவார் என்பது உறுதியாகியுள்ளது.
ஏனென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் நம்பர் 3 வரிசையில் களமிறங்கி வந்த சுப்மன் கில், அதிகபட்சமாகவே 47 ரன்களை தான் சேர்த்தார். சொந்த மண்ணிலேயே ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வந்த நிலையில், இந்த சதம் அனைத்து வழிகளிலும் அவருக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
இந்த சதம் குறித்து சுப்மன் கில் பேசுகையில், இந்த சதம் நிச்சயம் எனக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஆனால் தவறான நேரத்தில் ஆட்டமிழந்தேன் என்பதே உண்மை. அதேபோல் ஹார்ட்லி வீசிய பந்து எனது பேட்டில் இன்சைட் எட்ஜானதை உணரவில்லை. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் தான் டிஆர்எஸ் முறையீடு செய்ய அறிவுறுத்தினார். அதேபோல் பாய்ண்ட் திசையில் நின்றிருந்த ஃபீல்டர் கொஞ்சம் மாற்றப்பட்டார். அப்போது அந்த திசையில் ரன்கள் சேர்க்கலாம் என்று அடித்த ஷாட்டில் ஆட்டமிழந்தேன்.
கூடுதலாக 5 முதல் 6 ஓவர்களை விளையாடியிருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த பிட்சில் சில நேரங்களில் பந்து தாழ்வாகவும், சில பந்துகள் டர்னாகியும் வருகின்றன. நான் விளையாடும் பெரும்பாலான போட்டிகளை நேரில் பார்க்க தந்தை வந்துவிடுவார். அது ஒரு[போதும் எனக்கு அழுத்தத்தை கொடுத்ததில்லை. 2வது போட்டி 70-30 என்ற கணக்கில் தான் உள்ளது. 4வது நாளின் முதல் செஷன் முக்கியமானது. வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் இருவருக்கும் பிட்ச் உதவியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.