IND vs ENG : 92 வருட இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. 3 வீரர்கள் ஒரே மாதிரி அவுட்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூன்று இந்திய வீரர்கள் நன்றாக ரன் குவித்தும் சதம் அடிக்க முடியாமல் 80+ ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தனர். 92 வருட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று இந்திய வீரர்கள் ஒரே போட்டியில் சதம் அடிக்காமல் 80 ரன்களில் ஆட்டமிழப்பது இதுவே முதல்முறை ஆகும்.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 436 ரன்கள் குவிக்க விட்ட போதும், அந்த பேட்ஸ்மேன்களின் செஞ்சுரி கனவை கலைத்து ஆறுதல் அடைந்தது. இந்தப் போட்டி ஹைதரபாத் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்கள் குவித்தது அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே சிறப்பாக ஆடி 70 ரன்கள் குவித்தார். அடுத்து இந்தியா பேட்டிங் செய்தது.
இந்திய அணியில் துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 74 பந்துகளில் 80 ரன்கள் குவித்து ஜோ ரூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து மிடில் ஆர்டரில் கே எல் ராகுல் பொறுப்பாக ஆடி 86 ரன்கள் எடுத்து டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் 80 ரன்கள் எடுத்தும் சதம் அடிக்காமல் ஆட்டமிழந்தனர்.
அடுத்து பின்வரிசையில் ரவீந்திர ஜடேஜா ரன் குவித்து அணியின் ஸ்கோர் 400 ரன்களை தாண்ட உதவினார். அவர் இரண்டாம் நாள் முடிவில் 81 ரன்கள் குவித்த நிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஜடேஜா சதம் அடிப்பார் என எண்ணிய ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. அவர் 87 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 436 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி பந்துவீச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத போதும் மூன்று இந்திய வீரர்களின் சதம் அடிக்கும் வாய்ப்பை தடுத்த திருப்தியுடன் முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தை முடித்தது அந்த அணி. முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 190 ரன்கள் முன்னிலை பெற்றது.