IND vs ENG : கேஎஸ் பரத்திற்கு ஆப்பு.. இளம் விக்கெட் கீப்பருக்கு வாய்ப்பு? ரோகித் சர்மா முடிவு என்ன?
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பராக அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் பிப்.15ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதனையொட்டி இந்திய வீரர்கள் அனைவரும் ராஜ்கோட் மைதானத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளனர். நேற்றிரவு மும்பையில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் உள்ளிட்டோர் ராஜ்கோட் பயணித்தனர்.
இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறும் அணியால் எளிதாக தொடரை வெல்ல முடியும். இதனால் இரு அணிகளுக்கும் இந்த டெஸ்ட் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனிடையே இந்திய அணி தரப்பில் 3வது டெஸ்ட் போட்டியில் முக்கிய மாற்றத்தை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட கேஎஸ் பரத் 92 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள கேஎஸ் பரத் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் உள்ளார். ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகியிருக்கும் சூழலில், இந்திய அணி தரப்பில் அளிக்கப்பட்டு வரும் தொடர் வாய்ப்புகளை கேஎஸ் பரத் பயன்படுத்தி கொள்ளவில்லை.
சொந்த மண்ணில் களமிறங்கிய டெஸ்ட் போட்டியில் கூட மோசமான ஷாட்களை விளையாடி ஆட்டமிழந்தார். அதேபோல் விக்கெட் கீப்பராக கேட்ச்களை சிறப்பாக பிடித்தாலும், டிஆர்எஸ் முறையீட்டில் ரோகித் சர்மாவுக்கு மோசமான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இதன் காரணமாக 3வது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் துருவ் ஜுரெலுக்கு வாய்ப்பு வழங்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ரஞ்சி டிராபி போட்டிகளில் உத்தரப் பிரதேச அணியின் விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டுள்ள துருவ் ஜுரெல், ஐபிஎல் தொடரிலும் விக்கெட் கீப்பராக கவனம் ஈர்த்தவர். அதேபோல் இந்தியா ஏ அணிக்காகவும் விக்கெட் கீப்பிங் செய்த அனுபவத்தை கொண்டுள்ளார். பேட்டிங்கிலும் அச்சமின்றி விளையாடும் திறமையை கொண்டு துருவ் ஜுரெலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.