IND vs ENG : என்ன தம்பி சொல்ற.. உனக்கு இந்தி தெரியுமா.. இங்கிலாந்து வீரரால் மிரண்ட சர்பராஸ் கான்!
இங்கிலாந்து அணியின் சோயப் பஷீர் மற்றும் இந்திய அணியின் சர்பராஸ் கான் இடையில் நடைபெற்ற உரையாடல் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்கள் சேர்த்திருந்தது. இதையடுத்து 2ஆம் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 2ஆம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணியின் ராபின்சன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பின், இளம் சுழற்பந்துவீச்சாளரான சோயப் பஷீர் களமிறங்கினார். அவர் களமிறங்கிய போது ஷார்ட் லெக் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த சர்பராஸ் கான் அவரை ஸ்லெட்ஜிங் செய்ய முயற்சித்தார்.
வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் ஷார்ட் லெக், ஸ்லிப் மற்றும் விக்கெட் கீப்பர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களை அதிகளவில் ஸ்லெட்ஜிங் செய்வார்கள். ஆட்டத்தின் ஒரு பகுதியாகவே அவர்களின் ஸ்லெட்ஜிங் இருக்கும். பேட்ஸ்மேன்களின் கவனத்தை திசை திருப்பும் செயலாக எதிரணி ஃபீல்டர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவார்கள்.
அந்த வகையில் சோயப் பஷீர் களமிறங்கிய போது சக இந்திய வீரர்களிடம் சர்பராஸ் கான், இவனுக்கு நன்றாக பேட்டிங் செய்ய வரும். ஆனால் இந்தி தெரியாது என்று கூறினார். இதனை கவனித்த சோயப் பஷீர், எனக்கும் கொஞ்சம் தான் இந்தி தெரியும் என்று சர்பராஸ் கானை நோக்கி பதிலளித்தார். இதையடுத்து ஆச்சரியமடைந்த சர்பராஸ் கான், இவருக்கு இந்தி தெரிகிறது என்று ஜாலியாக எச்சரிக்கை செய்தார்.
இவர்களின் உரையாடல் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியது. இந்திய அணி வீரர்கள் களத்தில் இருக்கும் போது சக வீரர்களுடன் இந்தியில் ஆலோசனை செய்ய இந்தியையும், எதிரணியின் ஸ்லெட்ஜிங் செய்ய ஆங்கிலத்தையும் பயன்படுத்துவார்கள். இந்திய அணி வீரர்களுக்கு இரு மொழிகள் தெரியும் என்பதால், ஓரளவு எதிரணியின் திட்டங்களும் புரிந்து கொள்ள முடியும்.
சோயப் பஷீரை பொறுத்த வரை, பாகிஸ்தானை சேர்ந்தவர். அங்கிருந்து புலம்பெயர்ந்த அவரின் குடும்பத்தினர் இங்கிலாந்தில் செட்டிலாகியுள்ளனர். அண்மையில் இந்திய டெஸ்ட் தொடருக்காக சோயப் பஷீர் தேர்வு செய்யப்பட்ட போது, அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதால், விசா வழங்குவதற்கு கூடுதல் காலம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.