IND vs ENG : டீமில் இடம் கிடைக்கும் என.. எதிர்பார்த்து ஏமாந்த ஃபாஸ்ட் பவுலர்.. ரோஹித் சர்மாவுக்கு வைத்த குட்டு
ராஜ்கோட் : இந்திய டெஸ்ட் அணியில் தனக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த உமேஷ் யாதவ் சமூக வலைதளத்தில் ரோஹித் சர்மாவுக்கு எதிரான தன் எதிர்ப்பை சூசகமாக பதிவு செய்து இருக்கிறார்.
கடந்த 4 – 5 வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று வந்தார் உமேஷ் யாதவ். இடை இடையே அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு வந்தது. எனினும், பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி மட்டுமே முதன்மை வேகப் பந்துவீச்சாளர்களாக இருந்தனர்.
கடைசியாக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உமேஷ் யாதவ் இடம் பெற்று இருந்தார். அதன் பின் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. எனினும், மனம் தளராத உமேஷ் யாதவ் தற்போது ரஞ்சி தொடரில் இடம் பெற்று மூன்று போட்டிகளில் 18 விக்கெட்களை அள்ளினார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் பும்ராவைத் தவிர மற்ற வேகப் பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த திணறி வருகின்றனர். இந்த நிலையில் தான் நல்ல ஃபார்மில் இருப்பதால் தனக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தார் உமேஷ் யாதவ். இந்த நிலையில் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் உமேஷ் யாதவ் பெயர் இடம் பெறவில்லை.
ஆனால், ஆகாஷ் தீப் என்ற அறிமுக வேகப் பந்துவீச்சாளருக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்பட்டது, இதை அடுத்து தன் எதிர்ப்பை சூசகமாக பதிவு செய்து இருக்கிறார் அவர். தனது பதிவில், “புத்தகம் தூசியால் மூடப்பட்டு இருந்தாலும் அதில் இருக்கும் கதைகள் முடியாது” எனக் கூறி இருக்கிறார்.