IND vs ENG : 5வது டெஸ்ட்டில் இந்தியா தோற்றால் இப்படி ஒரு சிக்கல் இருக்கா.. எச்சரித்த விமர்சகர்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை இழக்க நேரிடும் என கிரிக்கெட் விமர்சகர்கள் எச்சரித்து உள்ளனர்.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. இந்த தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் முடிந்துள்ளன. அதன் முடிவில் இந்திய அணி 3 – 1 என தொடரைக் கைப்பற்றியது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் 64.58 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது.
தற்போது நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரும் நடைபெற்று வருகிறது. அந்த இரண்டு அணிகளும் இந்த புள்ளிப் பட்டியலில் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கின்றன. நியூசிலாந்து அணி 60 சதவீத வெற்றியுடன் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியா 59.09 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்த நிலையில் அந்த இரண்டு அணிகளும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோத உள்ளன. அதன் முடிவில் எந்த அணி வென்றாலும் தற்போது இந்தியா வைத்திருக்கும் வெற்றி சதவீதத்தை முந்தும். ஆனால், இந்திய அணி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தினால் கூடுதல் வெற்றி சதவீதம் பெறும். அப்போது நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியின் முடிவு எப்படி அமைந்தாலும் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கும்.
எனவே, இந்திய அணி டெஸ்ட் தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டதால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் எந்த பரிசோதனை முயற்சியும் செய்யாமல் வெற்றியை குறி வைத்து ஆட வேண்டும் எனவும் கூறி உள்ளனர். ஐந்தாவது டெஸ்ட்டில் பும்ரா அணிக்கு திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் இந்திய அணியின் பந்துவீச்சு மேலும் பலமடைந்துள்ளது.