IND vs ENG: நீயெல்லாம் மனுஷனே கிடையாது.. பேக் டூ பேக் இரட்டை சதம்.. கோலியை எட்டிப்பிடித்த ஜெய்ஸ்வால்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் உட்பட 321 ரன்களை குவித்திருந்தார். இந்த நிலையில் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ஜெய்ஸ்வாலை கட்டுப்படுத்த இங்கிலாந்து அணி திட்டத்தை கண்டறிந்ததாக கருத்துகள் கூறப்பட்டது.
இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஜெய்ஸ்வால் 3வது நாள் ஆட்டத்தின் போதே சதம் விளாசி அசத்தினார். ஆனால் முதுகு பிடிப்பு காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேற, 4வது நாள் ஆட்டத்தில் சுப்மன் கில் வெளியேறிய பின் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தார். எந்த இடத்தில் அதிரடியை விட்டு வெளியேறினாரோ, அதே அதிரடியை தொடர்ந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதில் ஆண்டர்சன் பவுலிங்கில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து மிரள வைக்க, ஸ்பின்னர்களின் பவுலிங்கில் பொளந்து கட்டினார். 190 ரன்களை எட்டிய போது, ரசிகர்களிடையே பதற்றம் அதிகரித்தது. ஆனால் ஜெய்ஸ்வால் கொஞ்சம் கூட பதற்றமில்லாமல் இரட்டை சதத்தை விளாசி தள்ளினார். இதன் மூலம் தொடர்ந்து அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய 3வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இவருக்கு முன்பாக ஜாம்பவான் வீரரான வினோத் காம்ப்ளி மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த போட்டிகளில் இரட்டை சதம் விளாசியுள்ளனர். அதேபோல் இரட்டை சதம் விளாசிய அடுத்த 2 பந்துகளில் சிக்ஸ் அடித்த ஜெய்ஸ்வால், இன்னொரு சாதனையையும் படைத்துள்ளார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற வாசிம் அக்ரமின் சாதனையை சமன் செய்துள்ளார்.
1996ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் வாசிம் அக்ரம் 12 சிக்சர்களை விளாசியதே உலக சாதனையாக இருந்தது. தற்போது இந்த இன்னிங்ஸில் 12 சிக்சர்காளை விளாசி வாசிம் அக்ரம் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். 22 வயதிலேயே பல்வேறு சாதனைகளை படைத்துள்ள ஜெய்ஸ்வாலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.