IND vs ENG : ஏலே நீ ஒரு ஆர்டிஸ்ட்டுன்னு நிரூபிச்சுட்டலே.. அச்சு அசலாக வரைந்து வியக்க வைத்த ஓவியர்
இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் முதல் டெஸ்ட் போட்டியை பிரபல ஓவியர் ஆன்டி பிரவுன் அப்படியே ஓவியமாக வரைந்து இருக்கிறார். அவரது தத்ரூபமான ஓவியம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
அதிலும் ஒட்டுமொத்த மைதானத்தையும் ஒரே ஓவியத்தில் அவர் கொண்டு வந்திருந்தார். மைதான மேற்கூரையில் துவங்கி, இருக்கைகள், ரசிகர்கள், வீரர்கள், ஆடுகளம், அம்பயர் முதற்கொண்டு எல்லாவற்றையும் ஒரே ஓவியத்தில் அவர் தத்ரூபமாக கொண்டு வந்தார். கேன்வாஸ் பெயின்டிங் முறையில் ஓவியம் தீட்டி இருந்தார்.
இங்கிலாந்தை சேர்ந்த ஆன்டி பிரவுன் உலகம் முழுவதும் சுற்றி ஓவியம் வரைந்து வரும் ஓவியக் கலைஞர் ஆவார். குறிப்பாக விளையாட்டுப் போட்டிகளை வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அமெரிக்காவில் பேஸ்பால் போட்டிகளை நேரில் கண்டு, அதை அப்படியே வரைந்து இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை ஓவியமாக வரைய விரும்பி இருக்கிறார். அதற்காக பிசிசிஐ-யிடம் அனுமதி பெற்று முதல் டெஸ்ட் போட்டி நடந்து வரும் ஹைதராபாத்திற்கு சென்று போட்டியை நேரில் கண்டு அதை ஓவியமாக வரைந்தார். போட்டி ஒளிபரப்பின் இடையிலும் அவரது ஓவியம் திரையில் காட்சிப்படுத்தப்பட்டது.
அப்போது திரையில் தெரிந்த மைதானத்திற்கும், அவரது ஓவியத்திற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அந்த அளவுக்கு புகைப்படம் போலவே இருந்தது ஆன்டி பிரவுன் வரைந்த ஓவியம். சமூக ஊடகங்களில் ரசிகர்கள் அவரை பிரமிப்புடன் பாராட்டினர்.
இங்கிலாந்து நாட்டின் ஆன்டி பிரவுன் வியப்பை ஏற்படுத்திய நிலையில், இங்கிலாந்து அணி அப்படி எதுவும் செய்யவில்லை. மாறாக முதல் டெஸ்ட்டில் மோசமாக செயல்பட்டது. முதல் இன்னிங்க்ஸில் அவசரகதியில் ஆடத் துவங்கி பின் விக்கெட்களை இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது இங்கிலாந்து அணி. பின்னர், இந்திய அணி பேட்டிங் செய்த போதும் பந்து வீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்தியா இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்து இருந்தது. இந்திய அணி 175 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது.