IND vs PAK: இந்தியா பாகிஸ்தான் டி20 உலக கோப்பை டிக்கெட் விலை ரூ.1.86 கோடியா?
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஜூன் 1 முதல் துவங்க உள்ளது. இந்த முறை உலக கோப்பை போட்டி கரீபியன் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. ஐசிசி போட்டிகள் முதல் முறையாக அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி உலக கோப்பை போட்டிகள் துவங்கினாலும், ஜூன் 9-ம் தேதி நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு தான் பலரும் ஆர்வமாக உள்ளனர். காரணம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இருதரப்பு தொடர்கள் எதுவும் நடைபெறுவது இல்லை. இந்த இரண்டு அணியும் ஐசிசி போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றனர். இதனால் தான் இந்த போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடங்க இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளன. இதற்கு முன்பு, இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளனர். அமெரிக்காவில் நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இந்த போட்டியின் டிக்கெட் சம்பந்தமான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இரு அணிகளும் டி20 கிரிக்கெட்டில் விளையாட உள்ளதால் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளின் விலை தாறுமாறாக எகிறி உள்ளது. ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியும், ஜூன் 15-ம் தேதி புளோரிடாவில் நடக்கும் கனடாவுக்கும் எதிராஎதிராக இந்திய அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட்கள் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் ஐசிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த போட்டிக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக காட்டுகிறது. தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடும் உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் பிளாக் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் அசல் டிக்கெட் விலையை விட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு அதிகமாக விற்கப்படுகின்றன. சில டிக்கெட்டுகளின் விலை ரூ.1.86 கோடியையும் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. ஐசிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விலை காட்டப்படுகிறது. குறைந்த டிக்கெட்டின் விலை ரூ.497 ஆகவும், விலை உயர்ந்த டிக்கெட்டின் விலை ரூ.33,148 ஆகவும் உள்ளது.
இந்நிலையில், இந்த டிக்கெட்டை வாங்கியவர்கள் வெவ்வேறு இணையதளங்கள் மூலம் அவற்றை மறுவிற்பனை செய்து வருகின்றனர். இதில் விஐபி டிக்கெட்டுகளின் விலை சுமார் ரூ.33.15 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான மலிவான டிக்கெட் விலை பிளாக் மார்க்கெட்டில் ரூ. 1.04 லட்சமாக உள்ளது. ஐசிசி உலக கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை 2022 பிப்ரவரியில் தொடங்கியது. வெறும் 10 நாட்களுக்குள், இந்த டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து தற்போது பிளாக் மார்க்கெட்டில் கிடைக்கின்றன.