IND vs SA : 13 வருட வரலாற்று சாதனை.. தோனி ரெக்கார்டை உடைக்க ரோஹித் சர்மாவுக்கு கடைசி சான்ஸ்
இந்திய கிரிக்கெட்டில் தோனி மட்டுமே செய்த ஒரு அரிய 13 வருட சாதனையை கேப்டன் ரோஹித் சர்மா முறியடிக்க கடைசி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை. ஆனால், ஒரே ஒரு முறை சமன் செய்துள்ளது. 2010ஆம் ஆண்டு கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 – 1 என சமன் செய்து இருந்தது. தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணியின் அதிகபட்ச டெஸ்ட் தொடர் சாதனை என்பது அதுதான்.
தற்போது இந்திய அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று உள்ளது. இதில் முதல் போட்டியில் இந்தியா மோசமாக ஆடி ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
ஒருவேளை முதல் டெஸ்ட்டில் வென்று இருந்தால் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்திய அணி, தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கும். ஆனால், அந்த வாய்ப்பு நழுவிப் போனது. இனி தொடரை சமன் செய்யும் வாய்ப்பு மட்டுமே இந்திய அணிக்கு உள்ளது.
கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இந்திய வீரர்கள், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற பயிற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை 1 – 1 என சமன் செய்யலாம். அதன் மூலம் 13 வருடத்திற்கு முன் தோனி செய்த அதே சாதனையை கேப்டன் ரோஹித் சர்மாவும் செய்ய முடியும்.